மழைபாதிப்பு மீட்பு பணிக்கு தயார் நிலையில் 100 சாலை பணியாளர்கள்

திருப்பத்தூர் மாவட்டத்தில்மழைபாதிப்பு மீட்பு பணிக்கு தயார் நிலையில் 100 சாலை பணியாளர்கள் உள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் அடிக்கிறது. இரவு நேரங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஏலகிரி பகுதிகளில் ஓடைகளில் புதியதாக வெள்ளம் ஏற்பட்டு, நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. அதிக காற்றின் காரணமாக மரக்கிளைகள் ஒடிந்து சாலையில் விழந்து வருகின்றன. அவை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி தலைமையில் உதவி கோட்ட பொறியாளர்கள், பொறியாளர்கள் மூலம் உடனுக்குடன் அகற்றப்பட்டு, சாலைகள் சீர் செய்யப்பட்டு வருகின்றன. ஏலகிரி, புதூர் நாடு மலை பகுதிகளில் சாலை பணியாளர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டு சாலைகளில் உருண்டு விழும பாறைகள் மற்றும் மண் சரிவுகள் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகின்றன.
நேற்று முன்தினம் இரவு புல்லூர் தடுப்பணை நிரம்பி பாலாற்றில் திடீர் வெள்ளம் வரத்தொடங்கியது. வெள்ளம் விரைந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், பருவ மழை காரணமாக நெடுஞ்சாலைத்துறை மூலம் முன்னெச்சரிக்கையாக போதுமான மரம் அகற்றும் எந்திரம், மணல் மூட்டைகள், ஜெனரேட்டர்கள், பொக்லைன் எந்திரங்கள், தளவாடங்களுடன் 100-க்கு மேற்பட்ட சாலை பணியாளர்கள், மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர்.
இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.






