அறுவடைக்கு தயாரான 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன


அறுவடைக்கு தயாரான 1,000 ஏக்கர்   நெற்பயிர்கள் சாய்ந்தன
x

நீடாமங்கலத்தில் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருவாரூர்

கொரடாச்சேரி:

நீடாமங்கலத்தில் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

குறுவை சாகுபடி

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டத்தில் 52 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இதில் 30 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

ராயபுரம், காளாஞ்சிமேடு, கடம்பூர், பரப்பனாமேடு, சித்தமல்லி மேல்பாதி, பூவனூர், அனுமந்தபுரம், பெரம்பூர், காளாச்சேரி, ராயபுரம், மேலபூவனூர், காணூர், அனுமந்தபுரம், தேவங்குடி, ரிஷியூர் உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீரை பயன்படுத்தி முன்கூட்டியே குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டனர். தற்போது இந்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன.

நெற்பயிர்கள் சாய்ந்தன

இந்த நிலையில் நீடாமங்கலம் பகுதியில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்த மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்துள்ளன.

இதனால் மகசூல் குறையும் என விவசாயிகள் கவலையில் உள்ளனர். வயல்களில் தேங்கிய மழை நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story