கெட்டு போன ஆட்டு இறைச்சி 1,000 கிலோ பறிமுதல்
தேவகோட்டையில் விற்பனைக்கு வைத்திருந்த கெட்டு போன ஆட்டு இறைச்சி 1,000 கிலோ பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது.
தேவகோட்டை.
தேவகோட்டையில் விற்பனைக்கு வைத்திருந்த கெட்டு போன ஆட்டு இறைச்சி 1,000 கிலோ பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது.
அதிரடி சோதனை
தேவகோட்டை மேலபஜார் பகுதியில் கெட்டு போன இறைச்சிகளை விற்பதாக சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் பிரபாவதிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இவரது உத்தரவின் பேரில் தேவகோட்டை நகர் உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையில் நகராட்சி சுகாதார தொழிலாளர்கள், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் பாதுகாப்புடன் போலீசார் தகவல் கிடைத்த இறைச்சி கடைக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையின் போது அந்த கடையில் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து கெட்டு போன இறைச்சிகளை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
1000 கிலோ இறைச்சி பறிமுதல்
அதன் பின்னர் தேவகோட்டை நடராஜபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். அங்கு இதுபோல செத்த ஆடுகளை அறுப்பதற்காகவே நகராட்சி அனுமதி இன்றி தொழிற்சாலை போல் நடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் வீட்டிற்குள் சென்று பெரிய குளிர்சாதன பெட்டிகளை சோதனை இட்டபோது துர்நாற்றம் வீசியது.பின்னர் அதில் இருந்து ஒரு டன் கெட்டுப்போன கறிகளை கைப்பற்றினர். அதை கொண்டு சென்று நகராட்சி குப்பை கிடங்கில் போட்டு அழித்தனர்.
பின்னர் மிக அதிகமான அளவில் கெட்டுப்போன கறி கைப்பற்றப்பட்டு இருப்பதால் உயர் அதிகாரிகளின் ஆலோசனை பேரில் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை பரிந்துரை செய்துள்ளது. இந்த சம்பவம் தேவகோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.