ரூ.155.42 கோடியில் 1,000 புதிய வகுப்பறை கட்டிடங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
21 மாவட்டங்களில் 20.54 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 50 கிராமச் செயலகங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ், ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6000 புதிய வகுப்பறைகளும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,200 வகுப்பறைகளும், என மொத்தம் 1,050 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7,200 வகுப்பறைகள் நடப்பாண்டிலேயே கூடுதலாகக் கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன் அடிப்படையில் 2022-23-ஆம் ஆண்டில் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5,653 புதிய வகுப்பறைகள் கட்ட அரசாணை வெளியிடப்பட்டது. இத்திட்டம் "குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்" என்று ஊரகப் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கட்டிடங்கள் அனைத்தும் குழந்தை நேய சிறப்பு அமைப்புகளான உயர்த்தப்பட்ட மேற்கூரை, விசாலமான தாழ்வாரம், காற்றோட்டமிக்க ஜன்னல் வசதிகள், வழுக்காத தரைகள். கற்றலை ஊக்குவிக்கும் சுவர் ஓவியங்கள், வாழ்க்கைப் பாடங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.
இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கட்டி முடிக்கப்பட்ட 1,000 வகுப்பறைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 26.09.2023 அன்று திறந்து வைத்தார்.
தற்போது, இன்று இரண்டாம் கட்டமாக 34 மாவட்டங்களில் 155.42 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,000 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வகுப்பறைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
50 கிராம ஊராட்சி செயலக கட்டிடங்கள்:-
கிராம ஊராட்சி அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் ஒரே கிராமத்தில் அமையப்பெற்று இருப்பின், அவற்றை முதன்மைப்படுத்தி சுமார் 600 கிராமச் செயலகக் கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 21 மாவட்டங்களில் 20.54 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 50 கிராமச் செயலகங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கிராமச்செயலகக் கட்டிடங்களில் கிராம ஊராட்சித் தலைவருக்கான அறை, கிராம ஊராட்சி செயலருக்கான அறை, கிராம நிர்வாக அலுவலருக்கான அறை மற்றும் கூட்ட அறை, இணையதள வசதி, பொதுமக்கள் அமர்வதற்கான வசதி, குடிநீர் மற்றும் கழிவறை வசதி ஆகியவற்றுடன் அனைத்து துறை அலுவலர்களும் பயன்படுத்திடும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம், கிராம ஊராட்சியிலுள்ள பொதுமக்கள் கிராம செயலகங்களை எளிதில் அணுகி தங்களது குறைகளைப் போக்கிட வழிவகை ஏற்படும்.
102 கிராம ஊராட்சி மன்ற கட்டிடங்கள்:-
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் மற்றும் தேசிய கிராம சுயாட்சி திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் 24 கோடியே 39 லட்சம் ரூபாய் செலவில் அனைத்து மாவட்டங்களிலும் கட்டப்பட்டுள்ள 102 கிராம ஊராட்சி மன்றக் கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
5 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்கள்:-
பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பழுதடைந்த நிலையில் இருந்த ஊராட்சி ஒன்றியக் கட்டிடங்களுக்குப் பதிலாக, நாமக்கல் மாவட்டம் பரமத்தி, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணச்சநல்லூர், மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு ஆகிய இடங்களில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய்க் கூறு நிதியிலிருந்து 15.46 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 5 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.