788 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000


788 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000
x

விழுப்புரம் மாவட்டத்தில் புதுமை பெண் திட்டத்தின் மூலம் 788 மாணவிகளுக்கு 1000 ரூபாயை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.

விழுப்புரம்

விழுப்புரம்,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தின்கீழ் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைபெண் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து விழுப்புரத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் மாவட்ட கலெக்டர் மோகன், துரை ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் லட்சுமணன், புகழேந்தி, சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கலந்து கொண்டு, உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை பெறுவதற்கான வங்கி பற்று அட்டையினை (டெபிட் கார்டு) வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

788 மாணவிகளுக்கு...

மாணவிகளின் கல்வி இடைநிற்றலை தவிர்த்திடும் விதமாக உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் "புதுமைபெண் திட்டம்" என்ற பெயரில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பாரதி கண்ட புதுமைப்பெண்களாக நீங்கள் உருவாக வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களை பெருமைப்படுத்தும் நோக்கத்தோடு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் இத்திட்டத்தில் 54 கல்லூரிகளை சேர்ந்த 3,267 மாணவிகளுக்கு ரூ.3,92,04,000 நிதியுதவி வழங்கப்பட உள்ளது. அவற்றில் முதல்கட்டமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 19 கல்லூரிகளை சேர்ந்த 788 மாணவிகளுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மலருடன் கூடிய வரவேற்பு பெட்டகப்பை மற்றும் வங்கி பற்று அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இவ்விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், துணைத்தலைவர் ஷீலாதேவி சேரன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ராஜம்மாள், நகரமன்ற தலைவர்கள் விழுப்புரம் தமிழ்ச்செல்வி, திண்டிவனம் நிர்மலா, அரசு சட்டக்கல்லூரி முதல்வர் தங்கரமணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஹரிஹரசுதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story