தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா பாதுகாப்பு பணியில் 1000 போலீசார் ஈடுபட உள்ளனர்
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா பாதுகாப்பு பணியில் 1000 போலீசார் ஈடுபட உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா பாதுகாப்பு பணியில் 1000 போலீசார் ஈடுபடுவர் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்து உள்ளார்.
ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார். ஆலய பங்கு தந்தை குமாரராஜா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பேசியதாவது:-
பனிமய மாதா கோவில் திருவிழா பாதுகாப்பு பணிக்கு 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 4 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 15 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
கண்காணிப்பு கேமராக்கள்
திருட்டு, செயின் பறிப்பு போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள், பழைய குற்றவாளிகள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை ரகசியமாக கண்காணிக்க 100-க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் போலீசார் சாதாரண உடையில் பொதுமக்களோடு மக்களாக கலந்து ஆங்காங்கே தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஆங்காங்கே கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அதிக அளவில் தங்க ஆபரணங்களை அணிந்து வரவேண்டாம், தங்களது குழந்தைகளையும், உடமைகளையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
நடவடிக்கை
மேலும் தங்க நகைகளை அணியும்போது உடைகளுடன் சேர்த்து ஊக்கு போன்றவற்றால் பின் செய்து பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். மேற்படி குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்க்க காவல்றையினர் ஒலிப்பெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். பொதுமக்கள் தங்களது குழந்தைகளையோ, பொருட்களையோ தவறவிட்டால் உடனடியாக மாதா கோவில் வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம். இந்த கூட்டத்தை பயன்படுத்தி யாராவது திருட்டு மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக பொதுமக்களுக்கு தெரியவந்தால் உடனடியாக போலீஸ் அவசர தொலைபேசி எண்களான 100 மற்றும் மாவட்ட போலீஸ் கட்டுபாட்டு அறை எண் 95141 44100 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். அவ்வாறு தகவல்கள் தருபவர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அமைதியான முறையில் வழிபட்டு செல்வதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. குற்ற சம்பவங்கள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லயோலா இக்னேசியஸ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிரேமானந்தன் (ஆவண காப்பகம்), ஜெயராம் (மாவட்ட குற்றப்பிரி), சங்கர் (மணியாச்சி), துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) கணேஷ்குமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.