3,700 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும்


3,700 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும்
x

புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 3,700 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று கல்லூரி முதல்வர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.

தர்மபுரி

புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 3,700 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று கல்லூரி முதல்வர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டம், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் பயன்பெற உள்ள மாணவிகள் பயின்று வரும் கல்லூரிகளின் முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் வருகிற 5-ந்தேதி சென்னையில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று பட்டப்படிப்பு படித்து வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதி உதவி வழங்கும் திட்டமான மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டம்-புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இதனை தொடர்ந்து தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள 11 கல்லூரிகளில் பயிலும் சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு புதுமைப்பெண் பெட்டகத்துடன் பணம் எடுக்கும் வங்கி அட்டையும் வழங்கப்பட உள்ளது.

பட்டியல் ஆய்வு

இந்த நிதி தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்கு மாவட்டத்தில் இணையதளத்தின் மூலம் ஏற்கனவே பதிவு செய்துள்ள 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் மட்டுமே பயின்ற மாணவிகளின் பட்டியல் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்தில் 66 கல்லூரிகளில் பயிலும் சுமார் 3,700 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற தேர்வு பெற்று உள்ள மாணவிகளை விழா நடைபெறவுள்ள தர்மபுரி அரசு கலைகல்லூரிக்கு 5-ந்தேதி அழைத்து வர சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் முதல்வர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் உதவி கலெக்டர் சித்ரா விஜயன், கல்லூரி கல்வி இயக்கக மண்டல இணை இயக்குனர் ராமலட்சுமி, மாவட்ட சமூக நல அலுவலர் ஜான்சிராணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர்.


Next Story