1,008 விநாயகர் சிலைகள் சொத்தவிளை கடற்கரையில் கரைப்பு


1,008 விநாயகர் சிலைகள் சொத்தவிளை கடற்கரையில் கரைப்பு
x

இந்து மகாசபா சார்பில் பூஜைக்கு வைக்கப்பட்டு இருந்த 1,008 விநாயகர் சிலைகள் சொத்தவிளை கடற்கரையில் கரைக்கப்பட்டன. ஊர்வலம் சென்ற பாதையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

இந்து மகாசபா சார்பில் பூஜைக்கு வைக்கப்பட்டு இருந்த 1,008 விநாயகர் சிலைகள் சொத்தவிளை கடற்கரையில் கரைக்கப்பட்டன. ஊர்வலம் சென்ற பாதையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

விநாயகர் சிலைகள் கரைப்பு

விநாயகர் சதுர்த்தியையொட்டி குமரி மாவட்டத்தில் இந்து அமைப்புகள் சார்பிலும் மற்றும் வீடுகள், கோவில்கள் உள்பட பல்வேறு இடங்களிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டன.

இந்த விநாயகர் சிலைகள் நேற்று முன்தினத்தில் இருந்து அந்தந்த இந்து அமைப்புகள் சார்பில் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.

இந்து மகாசபா

முதல்நாளான நேற்றுமுன்தினம் சிவசேனா சார்பில் பூஜைக்கு வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் கன்னியாகுமரி கடலிலும், குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும் கரைக்கப்பட்டன. 2-வது நாளான நேற்று குமரி மாவட்டம் முழுவதும் இந்து மகாசபா சார்பில் விநாயகர் சிலைகள் சொத்தவிளை கடற்கரையில் கரைக்கப்பட்டன.

இதற்காக மாவட்டம் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் நேற்று காலையில் அந்தந்த பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மேளதாளங்கள் முழங்கவும், பக்திப் பாடல்கள் ஒலித்தபடியும் நாகர்கோவில் நாகராஜா திடலுக்கு கொண்டு வரப்பட்டன. அனைத்து சிலைகளும் வந்து சேர்ந்தபிறகு பிற்பகல் 3 மணி அளவில் விநாயகர் சிலைகளுக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலம் அங்கிருந்து புறப்பட்டது.

ஊர்வலம்

ஊர்வலத்துக்கு இந்துமகாசபா மாநகர் மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். ஐகோர்ட்டு வக்கீல் நெல்லை சொரிமுத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக இந்து மகாசபா மாநில தலைவர் த.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அகோரி மணிகண்ட சுவாமிகள், இந்து மகாசபா மாநில செயல் தலைவர் கோவை குருஜி செந்தில்குமார், பொதுச்செயலாளர் பெரி.செந்தில், மாநில துணைத்தலைவர் புருஷோத்தமன் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, மாநகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஊர்வலம் நாகராஜா திடலில் இருந்து ஒழுகினசேரி சந்திப்பு, வடசேரி சந்திப்பு, அண்ணா விளையாட்டு அரங்கம், மணிமேடை சந்திப்பு, வேப்பமூடு சந்திப்பு, அண்ணா பஸ் நிலையம், கோட்டார், ஈத்தாமொழி பிரிவு ரோடு சந்திப்பு, பீச்ரோடு சந்திப்பு வழியாக சொத்தவிளை கடற்கரையை அடைந்தன.

1,008 சிலைகள் கரைப்பு

ஊர்வலத்தில் சுமார் 325 வாகனங்களில் சிறிய விநாயகர் சிலைகள் முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வரை 1,008 சிலைகள் கொண்டு செல்லப்பட்டதாக இந்து மகாசபா தலைவர் த.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

ஊர்வலம் சொத்தவிளை கடற்கரையை சென்றடைந்ததும், கடற்கரையில் விநாயகர் சிலைகள் அனைத்தும் வரிசையாக வைக்கப்பட்டன. பின்னர் அந்த சிலைகளுக்கு விநாயகருக்கான சிறப்பு பூஜை, சமுத்திர பூஜை, வர்ண பகவானுக்கான பூஜை, அர்ப்பண விழா பூஜை ஆகியவை நடந்தது. 18 அர்ச்சகர்கள் இந்த பூஜைகளை செய்தனர். அதன் பிறகு சிலைகள் ஒவ்வொன்றாக சொத்தவிளை கடலில் கரைக்கப்பட்டன. இந்த சிலை கரைப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் இந்து மகாசபா சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஊர்வலத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் கூடுதல் சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஊர்வல பாதை முழுவதும் உள்ளூர் மற்றும் வெளியூர் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

2-வது நாளாக...

இந்து மகாசபா சார்பில் வீடுகளில் பூஜைக்கு வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள், சிறுவர்- சிறுமிகள் பூஜைக்கு வைத்திருந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) லெமூர் கடற்கரையில் கரைக்கப்படுகிறது.

ஊர்வலத்தின்போது த.பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் நாகராஜா திடலில் இருந்து பீச்ரோடு சந்திப்பு வரை நடந்து சென்றனர். அப்போது சிலர் சிறு, சிறு விநாயகர் சிலைகளை கைகளில் வைத்து சுமந்தபடி சென்றனர்.

சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு வந்த வாகனங்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. இடையிடையே பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்தபடி ஊர்வலமாக சென்றனர்.



Next Story