சிங்கம்புணரி சேவகப்பெருமாள் அய்யனார் கோவிலில் 1008 சங்காபிஷேக விழா


சிங்கம்புணரி சேவகப்பெருமாள் அய்யனார் கோவிலில் 1008 சங்காபிஷேக விழா
x
தினத்தந்தி 15 Jun 2023 12:17 AM IST (Updated: 15 Jun 2023 4:32 PM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரியில் உள்ள சேவகப் பெருமாள் அய்யனார் கோவிலில் மண்டல பூஜை விழாவை முன்னிட்டு 1008 வலம்புரி சங்குகளை கொண்டு சங்காபிஷேகம் மற்றும் கலசாபிஷேகம் நடைபெற்றது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் உள்ள சேவகப் பெருமாள் அய்யனார் கோவிலில் மண்டல பூஜை விழாவை முன்னிட்டு 1008 வலம்புரி சங்குகளை கொண்டு சங்காபிஷேகம் மற்றும் கலசாபிஷேகம் நடைபெற்றது.

மண்டல அபிஷேக விழா

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட சேவகப் பெருமாள் கோவிலில் கடந்த 1-ந் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று மண்டல அபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக கோவில் மண்டபத்தில் 1008 வலம்புரி சங்குகளை கொண்டு நாமம், ஓம், சிவலிங்கம் வடிவிலும் மற்றும் மலர்கள் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டு வலம்புரி சங்குகளில் புனித நீர் ஊற்றப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று காலை 7 மணி அளவில் மண்டல பூஜை நடந்தது. திருப்பணி குழு தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம அருணகிரி தலைமையில் கோவில் கண்காணிப்பாளர் தண்ணாயிரம் முன்னிலையில் மண்டல அபிஷேக விழா நடைபெற்றது.

இதில் யாக குண்டம் அமைக்கப்பட்டு சிறப்பு யாக வேள்விகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து பூர்ணா குதி நடைபெற்று மகாதீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து வலம்புரி சங்குகளில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கொண்டு மூலவர் சேவகப் பெருமாள் அய்யனார், சுயம்பு லிங்கேஸ்வரர், அடைக்கலம் காத்த அய்யனார், பிடாரியம்மன் போன்ற கோவில் சன்னதியில் உள்ள மூலவர்களுக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது.

அன்னதானம்

சிவாச்சாரியார்கள் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கும்பங்கள் சுமந்து கொண்டு கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து சேவகபெருமாள் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்கள் அனைத்திற்கும் கும்பத்தில் உள்ள புனித நீர் ஊற்றப்பட்டு மண்டல அபிஷேக விழா நடைபெற்றது. மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து கிராமத்தின் சார்பிலும், அய்யப்ப சேவா சங்கத்தின் சார்பிலும் அன்னதான விழா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் திருப்பணி குழு தலைவர் ராம அருணகிரி, , அடைக்கலம் காத்த நாட்டார்கள் சிங்கம்புணரி கிராமத்தார்கள், பரம்பரை ஸ்தானியம் சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர்.


Next Story