கடற்படை விமானிகளுக்கான 100-வது பயிற்சி நிறைவு விழா
அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தில் கடற்படை விமானிகளுக்கான 100-வது பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. கிழக்கு பிராந்திய தளபதி வைஸ் அட்மிரல் பிஸ்வஜித் தாஸ் குப்தா சான்றிதழ் வழங்கினார்.
பயிற்சி நிறைவு விழா
அரக்கோணம் கடற்படை விமான தளமான ஐ.என்.எஸ். ராஜாளியில் உள்ள ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளியில் 100-வது கடற்படை ஹெலிகாப்டர் விமானிகளுக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிஸ்வஜித் தாஸ் குப்தா கலந்து கொண்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர், பயிற்சி முடித்த 16 கடற்படை ஹெலிகாப்டர் விமானிகளுக்கு சான்றிதழ்களையும், பயிற்சியில் பிளையிங்கில் முதலிடம் பிடித்த விமானிக்கான பிளாக் ஆபிசர் கமாண்டிங் இன் சீப், லெப்டினன்ட் அனுபவ் யாதவ்க்கும், தகுதி வரிசையில் முதலிடம் பிடித்த லெப்டினன்ட் சுமித் சிங் யாதவ்க்கு சப் லெப்டினன்ட் குண்டே நினைவு புத்தகப் பரிசும், ஒட்டுமொத்த தகுதி வரிசையில் முதலிடம் பிடித்த கேரள ஆளுனர் ரோலிங் கோப்பை லெப்டினன்ட் நிகில் கோரலுக்கு வழங்கப்பட்டது.
முயற்சிகளை அதிகரிக்கும்
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிஸ்வஜித் தாஸ் குப்தா பேசியதாவது:-
பயிற்சி நிறைவு செய்த கடற்படை ஹெலிகாப்டர் பைலட்டுகள் புதிதாக இணைக்கப்பட்ட ஹெலிகாப்டர்கள் உள்பட கப்பல் மூலம் செல்லும் விமானங்களை வலுப்படுத்துவதால் இந்திய கடற்படையின் முயற்சிகளை அதிகரிக்கும். ஹெலிகாப்டர் பயிற்சிப் படை, இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை மற்றும் நட்பு நாடுகளை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட விமானிகளுக்கு பயிற்சி அளித்துள்ளது என்றார்.
கடற்படை ஹெலிகாப்டர் விமானிகளுக்கான 100-வது பயிற்சி நிறைவு விழா என்பதால் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் மற்றும் ஓய்வுபெற்ற கொடி அதிகாரிகளும், படைவீரர்களும் கலந்து கொண்டனர்.