ரூ.51 கோடியில் 104 ஊரக சாலை பணிகள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.51 கோடியில் 104 ஊரக சாலை பணிகளை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
ஊரக சாலை பணிகள்
ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 7 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்வு செய்யப்பட்ட 104 ஊரக சாலைகள் 121 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேம்பாடு செய்ய ரூ.50 கோடியே 82 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வாலாஜா ஒன்றியம் வன்னிவேடு ஊராட்சியில் ரூ.48 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் தேவதானம் முதல் கீழ்தேவதானம் வரையிலான ஒரு கிலோமீட்டர் சாலை பணிகளுக்கு கலெக்டர் வளர்மதி தலைமையில் பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.
ரூ.50 கோடி
நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காந்தி பேசியதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் 22 சாலைகள் ரூ.8 கோடியே 22 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பீட்டிலும், ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் 9 சாலைகள் ரூ.6 கோடியே 38 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டிலும், காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் 7 சாலைகள் ரூ.5 கோடியே 60 லட்சத்து 93 ஆயிரத்திலும், நெமிலி ஒன்றியத்தில் 14 சாலைகள் ரூ.7 கோடியே 12 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பீட்டிலும், வாலாஜா ஒன்றியத்தில் 16 சாலைகள் ரூ.7 கோடியே 34 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டிலும், திமிரி ஒன்றியத்தில் 24 சாலைகள் ரூ.9 கோடியே 5 லட்சத்து 69 ஆயிரத்திலும், சோளிங்கர் ஒன்றியத்தில் 12 சாலைகள் ரூ.7 கோடியே 6 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 104 சாலைகள் 121 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.50 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ளது.
இந்த சாலைகள் தரமானதாகவும், நீண்ட காலம் பயன்தரும் வகையிலும் ஏற்படுத்தப்படும். இச்சாலைகளின் 5 வருட பராமரிப்பிற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா ஒன்றியக் குழு தலைவர் வெங்கட்ரமணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.