1,085 வழக்குகளுக்கு தீர்வு
நீலகிரியில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
ஊட்டி
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணவும், வழக்குகள் தேங்குவதை தவிர்க்கவும் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மற்றும் மாநில அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நீலகிரி மாவட்டம் ஊட்டி கோர்ட்டில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. சட்டப் பணிகள் ஆணை குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான அப்துல் காதர் தலைமை தாங்கினார். இதேபோல் குன்னூர், கூடலூர், பந்தலூர், கோத்தகிரி ஆகிய நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் நிலுவையில் உள்ள சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை மோசடி, மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், வங்கி வழக்குகள், வாரா கடன் வழக்குகள், குடும்ப பிரச்சினை சம்பந்தமான வழக்குகள் என 1,200-க்கும் மேற்பட்ட வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் ரூ.3 கோடியே 8 லட்சம் மதிப்பிலான 1,085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. இதில் நீதிமன்ற ஊழியர்கள், மனுதாரர்கள் வக்கீல்கள் கலந்துகொண்டனர்.