1,093 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு


1,093 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு
x

மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு 1,093 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.

கடலூர்

கடலூர்:

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கடலூர் மாவட்டத்தில் 1,220 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. 3-வது நாளான நேற்று விநாயகர் சிலைகளை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளில் போலீஸ் பாதுகாப்புடன் கரைத்தனர்.

கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் பக்தர்கள் வழிபாடு செய்த விநாயகர் சிலைகளை கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் கரைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

சில்வர் பீச்சுக்கு வருகை

அதன்படி இன்று காலையில் இருந்தே லாரி, மினி லாரி, டிராக்டர் போன்ற வாகனங்களில் விநாயகர் சிலைகளை தூக்கி வைத்து கரைப்பதற்காக புறப்பட்டனர்.

அப்போது தாரை தப்பட்டை, பேண்டு வாத்தியம், மேளதாளம் போன்ற இசைக்கருவிகளை இசைத்தபடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தபடி தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சுக்கு பக்தர்கள் வந்தனர். அங்குள்ள உயர்மின் கோபுர விளக்கு அருகில் வந்ததும் வாகனங்களில் இருந்த விநாயகர் சிலைகளை பக்தர்கள் கீழே இறக்கி, பின்னர் தோளில் வைத்து சுமந்தபடி கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.

கடலில் கரைத்தனர்

அங்கு விநாயகர் சிலைக்கு தேங்காய், பழம் படைத்து தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். பின்னர் அந்த விநாயகர் சிலையை ஏற்கனவே சிலைகளை கரைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் விநாயகர் சிலையை கடலுக்குள் கொண்டு சென்று கரைத்தனர். சிலையை கரைத்த பின்னர் பக்தர்கள் அங்கிருந்து தாங்கள் வந்த வாகனங்களில் ஊருக்கு திரும்பி சென்றனர்.

கடலூர் மட்டுமின்றி நெல்லிக்குப்பம், பண்ருட்டி, புதுப்பேட்டை, கண்டரக்கோட்டை, முத்தாண்டிக்குப்பம் ஆகிய பகுதிகளில் இருந்தும், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்தும் பக்தர்கள் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து கடலில் கரைத்தனர். அப்போது சிங்கம், மயில், மான், காளை, மூஷிகம் போன்ற பல்வேறு வாகனங்களின் மீது விநாயகர் அமர்ந்திருப்பது போன்ற சிலைகளையும் பக்தர்கள் கரைப்பதற்காக எடுத்து வந்தனர். மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட 1 அடி முதல் 2 அடி வரை உயரமுள்ள சிறிய விநாயகர் சிலைகளையும், சில்வர் பீச்சுக்கு கொண்டு வந்து கடலில் கரைத்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

விநாயகர் சிலைகளை கரைக்கும் போது எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மட்டும் மொத்தம் 1,093 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

மங்கலம்பேட்டையில் நாளை மறுநாள் ஊர்வலம்

மங்கலம்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பொது இடங்களில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கடலூர் சில்வர் பீச்சில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.


Next Story