10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு 20-ந்தேதி வெளியீடு


10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு 20-ந்தேதி வெளியீடு
x

10, 12-ம் வகுப்புக்கு ஏற்கனவே அறிவித்திருந்த தேதியில் தேர்வு முடிவு வெளியிடுவதில் மாற்றம் செய்து, தற்போது 2 வகுப்புகளுக்கும் வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளதாக அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

சென்னை,

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் (மே) நடந்து முடிந்தது. இந்த தேர்வுகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 17 லட்சத்துக்கு 92 ஆயிரத்து 450 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் இவர்களில் சுமார் 16 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளே தேர்வை எழுதியதாக கூறப்படுகிறது.அந்த வகையில் அவர்களின் விடைத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, கடந்த 1-ந்தேதி முதல் விடைத்தாள்கள் திருத்தும் பணி தமிழ்நாடு முழுவதும் நடந்தது. அதன்படி, கடந்த 9-ந்தேதியுடன் அந்த பணிகளும் முடிந்து, மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண்களை தேர்வுத்துறை அதிகாரிகள் சரிபார்த்து, தேர்வுத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர்.

ஏற்கனவே பொதுத்தேர்வு தொடர்பான அட்டவணை வெளியிட்ட நேரத்தில், 10-ம் வகுப்புக்கு ஜூன் 17-ந்தேதியும் (இன்றும்), 12-ம் வகுப்புக்கு ஜூன் 23-ந்தேதியும் (வியாழக்கிழமையும்) பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட அரசு தேர்வுத்துறை திட்டமிட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது அந்த தேதிகளில் வெளியிடாமல், 10, 12-ம் வகுப்புக்கு ஒரேநாளில் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத்துறை முடிவு செய்து அதற்கான தேதியை நேற்று அறிவித்தது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

20-ந்தேதி வெளியீடு

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கும், 10-ம் வகுப்பு தேர்வு முடிவை அதே 20-ந்தேதி பகல் 12 மணிக்கும் வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் சென்று தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.இதுதவிர, பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story