10-ம் நூற்றாண்டு மகாவீரர் சிலை கண்டெடுப்பு


10-ம் நூற்றாண்டு மகாவீரர் சிலை கண்டெடுப்பு
x

சிவகாசி அருகே 10-ம் நூற்றாண்டை சேர்ந்த மகாவீரர் சிலை கண்டெடுக்கப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அருகே 10-ம் நூற்றாண்டை சேர்ந்த மகாவீரர் சிலை கண்டெடுக்கப்பட்டது.

மகாவீரர் சிலை

சிவகாசி அருகே கிச்சநாயக்கன்பட்டியில் கி.பி.10-ம் நூற்றாண்டை சேர்ந்த மகாவீரர் சிலை கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இந்தசிலையை அப்பகுதி மக்கள் அய்யனார் என வழிபட்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தொல்லியல் ஆய்வாளரான திருத்தங்கல் பாலச்சந்திரன், சாத்தூர் கல்லூரி பேராசிரியர் ரவிச்சந்திரன் ஆகியோர் கிச்சநாயக்கன்பட்டிக்கு சென்று சிலையை ஆய்வு செய்தனர். அப்போது அது அய்யனார் சிலை இல்லை என்றும், 10-ம் நூற்றாண்டை சேர்ந்த மகாவீரர் சிலை என்பதும் தெரியவந்தது.

கம்பீர தோற்றம்

இதுகுறித்து பாலச்சந்திரன் கூறியதாவது:-

மகாவீரர் அரியாசனத்தின் மீது அர்த்த பரியங்காசனத்தில் அமர்ந்த கோலத்தில் தீர்த்தங்கரராக காட்சியளிக்கிறார். தலைக்கு மேல் மூன்றடுக்கு முக்குடை திகழ்கிறது. முக்குடையின் பக்க வாட்டில் பக்கத்திற்கு ஒருவராக பறந்து வரும் நிலையில் சூரியனும், சந்திரனும் உள்ளனர்.

சூரியன், சந்திரன் ஆகியோரது ஒரு கரம் முறையே தாமரை, அல்லி மலர்களை எந்தியுள்ளது. மற்றொரு கரம் தீர்த்தங்கரரை பரவிப்போற்றும் நிலையில் உள்ளது. கம்பீரமான தோற்றத்துடன் தலைப்பகுதி சற்றே சிதைந்து காணப்பட்டாலும் அமைதியும், மென்மையும் கொண்ட முகப்பொழிவுடன் அணிகலன்கள் அணியாத அழகராய் இருக்கிறார். கழுகுமலை சமண்பள்ளி காலத்தை ஒட்டி கி.பி. 10-ம் நூற்றாண்டைச்சேர்ந்த மகாவீரர் சிலையானது பாண்டியநாட்டில் சமண சமயம் ஒருகாலத்தில் உன்னத நிலையில் இருந்துள்ளதை இது உறுதி செய்வதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story