இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வு தாள் திருத்தும் மையம் அமைக்க வேண்டும்
இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வு தாள் திருத்தும் மையம் அமைக்க வேண்டும் என பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக புதுக்கோட்டை மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் குமரேசன் தலைமையில் நடைபெற்றது. மாநில தணிக்கையாளர் ரெங்கராஜு முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஜெயராம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். கூட்டத்தில் தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். கொரோனாவை காரணம் காட்டி நிறுத்தி வைத்த அகவிலைப்படியை மத்திய அரசு வழங்கியும் இதுவரை மாநில அரசு வழங்காததை கண்டிக்கிறது. ஆசிரியர்களுக்கு அண்ணா ஆட்சி காலத்திலிருந்து கொடுக்கப்பட்டு வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். இழந்த கோரிக்கைகளை மீட்டு எடுப்பதற்காக ஜாக்டோ- ஜியோ அறிவித்திருக்கும் மாவட்ட தலைநகரங்கள் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும். இலுப்பூர் கல்வி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் 10-ம் வகுப்பு தேர்வு தாள் திருத்தும் மையம் இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் இதுவரை தொடங்கப்படவில்லை. எனவே வரும் கல்வியாண்டில் தேர்வு தாள் திருத்தும் மையம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகளான மதலைமுத்து, இயலரசன், லதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.