10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லை அருகே 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை அருகே 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெல்டிங் பட்டறை உரிமையாளர்
நெல்லை அருகே மேலசெவல் பெரியசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் அப்பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஆவுடையம்மாள்.
இவர்களுக்கு பரத் (வயது 15) என்ற மகனும், ஒரு மகளும் உண்டு. பரத், சேரன்மாதேவியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
குடும்ப தகராறு
பாலசுப்பிரமணியனுக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனைப் பார்த்த மகன் பரத் மனமுடைந்த நிலையில் இருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலசுப்பிரமணியன் வேலை செய்தபோது தவறி விழுந்ததில் காலில் அடிபட்டது. இதனால் அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எனவே மனைவி ஆவுடையம்மாளும் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து கணவரை பார்த்து வருகிறார்.
மாணவர் தற்கொலை
இதனால் மேலசெவலில் உள்ள பாட்டியின் வீட்டில் பரத்தும், அவருடைய தங்கையும் தங்கியிருந்தனர். நேற்று பரத்தை காலையில் சீக்கிரமாக கண்விழிக்குமாறு கூறி பாட்டி சத்தம் போட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த பரத் வீட்டில் உள்ள அறையில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் விசாரணை
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பாட்டி மற்றும் உறவினர், முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று, இறந்த பரத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை அருகே 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.