கஞ்சா-லாட்டரி சீட்டுகள் விற்ற 11 பேர் கைது
கரூர் பகுதியில் கஞ்சா-லாட்டரி சீட்டுகள் விற்ற 11 பேரை கைது செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
6 பேர் கைது
கரூர் அருகே உள்ள காளிபாளையம் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக வாங்கல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்த வெங்கமேட்டை சேர்ந்த கந்தன் என்கிற கந்தசாமி (வயது 40), கணேசன் (39) வெண்ணைமலை பகுதியை சேர்ந்த செந்தில் (43), மனோரஞ்சித் (26), திருச்சி காஜாமலையை சேர்ந்த மதன் என்கிற மதன்ராஜ் (30), சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த மணிகண்டன் என்கிற பாலாஜி (26) ஆகிய 6 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 1¾ கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
பணம் வைத்து சூதாட்டம்
இதேபோல் கரூர் வெங்கமேடு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையிலான போலீசார் வெங்கமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, அங்குள்ள பேக்கரி அருகில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட வெங்கமேடு சேர்ந்த ரமேஷ் (45), கந்தசாமி (56), முருகன் (57), செந்தில்குமார் (47), வினோத்குமார் (36) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.