மதுரை விமான நிலையம் அருகே நடுரோட்டில் கவிழ்ந்த லாரி மீது ஏறி நின்ற பஸ்- 11 பயணிகள் காயம்
பின்னால் வந்த பஸ் மோதியதில் லாரி கவிழ்ந்தது. அந்த லாரி மீது அதே பஸ் ஏறி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் 11 பயணிகள் காயம் அடைந்தனர்.
பின்னால் வந்த பஸ் மோதியதில் லாரி கவிழ்ந்தது. அந்த லாரி மீது அதே பஸ் ஏறி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் 11 பயணிகள் காயம் அடைந்தனர்.
லாரி மீது பஸ் மோதியது
தூத்துக்குடியில் இருந்து சுண்ணாம்பு பவுடர் ஏற்றி வந்த ஒரு லாரி மதுரை விமான நிலையம் அருகே உள்ள சின்ன உடைப்பு சந்திப்பு பகுதியில் நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. அந்த லாரியின் பின்னால் அருப்புக்கோட்டையில் இருந்து மதுரை மாட்டுத்தாவணி நோக்கி தனியார் பஸ் வந்தது.
அந்த பகுதியில் லாரி திரும்பிய போது திடீரென்று பின்னால் வந்த பஸ் அந்த லாரி மீது மோதியது. இதில் நடுரோட்டில் லாரி கவிழ்ந்தது. அப்போது கட்டுபாட்டை இழந்த அந்த பஸ்சும் லாரியின் மீது மோதி அதன் மீது ஏறி நின்றது.
11 பயணிகள் காயம்
இதில் பஸ்சில் பயணம் செய்த 11 பயணிகள் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் போக்குவரத்து கூடுதல் துணை கமிஷனர் திருமலைக்குமார் தலைமையில், உதவி கமிஷனர் செல்வின், அவனியாபுரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தங்கபாண்டி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, நெல்லை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு சென்றுவிட்டு, அந்த வழியாக மதுரை விமான நிலையம் வருவதாக இருந்தது. எனவே போலீசார் உடனே கிரைனை வரவழைத்து லாரியையும், பஸ்சையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். அதை தொடர்ந்து கவர்னரின் வாகனங்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் விமான நிலையம் சென்றடைந்தன. இந்த விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.