பெட்ரோல் குண்டுவீச்சில் தொடர்புடைய 11 பேர் கைது


பெட்ரோல் குண்டுவீச்சில் தொடர்புடைய 11 பேர் கைது
x

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்களில் தொடர்புடைய 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை,

கோவையை அடுத்த குனியமுத்தூரில் 2 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி 2 பேரை கைது செய்தனர்.

இதுகுறித்து கோவை நகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று மாலை நிருபர்களிடம் கூறியதாவது:-

2 பேர் கைது

கோவை குனியமுத்தூரில் இந்து முன்னணி பிரமுகர் ரகுவின் கார் மீது கடந்த 23-ந் தேதி மர்ம எரிபொருளை வீசியதில் தீப்பற்றி எரிந்தது. அதே பகுதியை சேர்ந்த பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த பரத் என்பவர் வீட்டில் மண்எண்ணெயை பாட்டிலில் தீயை பற்ற வைத்து எறிந்தனர்.

இதில் தொடர்புடைய அறிவொளிநகரை சேர்ந்த ஜேசுராஜன் (வயது34), குனியமுத்தூரை சேர்ந்த இலியாஸ் (34) என்பதும், அவர்கள் 2 பேரும் எஸ்.டி.பி.ஐ. கட்சியில் பொறுப்பு வகிக்கிறார்கள் என்பதும் தெரிய வந்தது. உடனே அவர்கள் 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இவ்வாறு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறினார்.

கைதான ஜேசுராஜன் 87-வது வார்டு எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவராகவும், இலியாஸ் அந்த கட்சியின் உறுப்பினராகவும் உள்ளனர்.

சேலம்

சேலம் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் மண்எண்ணெய் குண்டு வீசியதாக கிச்சிப்பாளையத்தை சேர்ந்த சையத்அலி (33), பொன்னம்மாபேட்டையை சேர்ந்த காதர் உசேன் (42) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதில் சையத்அலி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சேலம் மாவட்ட தலைவராகவும், காதர் உசேன் 34-வது வார்டு கிளை தலைவராகவும் உள்ளனர். இதை கண்டித்து மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு

ஈரோடு மூலப்பாளையத்தில் பா.ஜ.க. பிரமுகர் தட்சிணாமூர்த்தி என்பவரது பர்னிச்சர் கடை மீது டீசல் அடங்கிய பாக்கெட்டுகளை மர்மநபர்கள் வீசி தீ வைக்க முயன்றனர். இதில் அங்கிருந்த சில பொருட்கள் நாசமாகின.

இதுதொடர்பாக ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த சதாம்உசேன் (25), கலில்ரகுமான் (27), ஜாபர் சாதிக் (27), இவரது தம்பி ஆசிக் அலி (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் சதாம் உசேன் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகி ஆவார்.

திண்டுக்கல்லில் பா.ஜ.க நிர்வாகி பால்ராஜ் என்பவரது கார் மற்றும் 7 மோட்டார் சைக்கிள்களை தீ வைத்து எரித்ததாக திண்டுக்கல்லை சேர்ந்த சிக்கந்தர் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரையில் ஆர்.எஸ்.எஸ்.நிர்வாகி கிருஷ்ணன் என்பவரது அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.


Next Story