சாராயம் கடத்திய-விற்ற பெண் உள்பட 11 பேர் கைது
நாகூர், கீழ்வேளூர், திருமருகல் பகுதிகளில் சாராயம் கடத்திய-விற்ற பெண் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
நாகூர்:
நாகூர், கீழ்வேளூர், திருமருகல் பகுதிகளில் சாராயம் கடத்திய-விற்ற பெண் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
நாகூரை அடுத்த மேல வாஞ்சூர் சோதனை சாவடியில் நாகூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது காரைக்காலில் இருந்து நாகையை நோக்கி 4 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் வேளாங்கண்ணியை அடுத்த பி.ஆர்.புரம் கிடங்கு தெருவை சேர்ந்த பாலசுப்புரமணியன் (வயது39), அதே பகுதியை சேர்ந்த ஐயப்பன் (42), தலைஞாயிறு பாலசமுத்திரம் குளம் வடகரையை சேர்ந்த துரைராஜ் (41), பாலையூர் தெற்கு தெருவை சேர்ந்த குணசேகரன் மகன் ரூபன் (34) என்பதும். இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
கைது
இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைதுசெய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 440 லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய 4 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
கீழ்வேளூர் மெயின் சாலையில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த வீரமணி (55), கீழ்வேளூர் ஜீவா நகரை சேர்ந்த பாஸ்கரன் மகன் தினேஷ் (27), கோவில்கடம்பனூர் சன்னதி தெருவில் சாராயம் விற்ற நாகை வெளிப்பாளையம் வ.உ.சி தெருவை சேர்ந்த பாஸ்கரன் மனைவி பரமு (45) ஆகிய 3 பேரை கீழ்வேளூர் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 220 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
திருமருகல்
திருமருகல் அருகே ஏனங்குடி பகுதியில் சாராயம் விற்ற ஏனங்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பஞ்சிநாதன் மகன் திருமுருகன் (25), ஏனங்குடி ஆற்றங்கரை தெருவை சேர்ந்த வீரமணி மகன் பார்த்திபன் (32), ஏனங்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பஞ்சநாதன் மகன் தினேஷ்குமார் (27) ஆகிய 3 பேரை திருக்கண்ணபுரம் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல காரைக்கால் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த வவ்வாலடி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (40) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.