எண்ணெய் ஆலை உரிமையாளர் வீட்டில் திருட முயன்ற 11 பேர் கைது
எண்ணெய் ஆலை உரிமையாளர் வீட்டில் திருட முயன்ற 11 பேர் கைது
காங்கயம்
காங்கயத்தில் எண்ணெய் ஆலை உரிமையாளர் வீட்டில் திருட முயன்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
பூட்டை உடைத்துதிருட முயற்சி
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அய்யாசாமி நகர் காலனி பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது62). இவர் காங்கயத்தில் எண்ணெய் ஆலை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் பொன்னுசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த 18-ந் தேதி இரவு தூங்க சென்றுள்ளனர்.
அப்போது நள்ளிரவு சுமார் 2 மணியளவில் வீட்டின் முன்புற கதவின் பூட்டு உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தத்தை கேட்ட பொன்னுசாமி எழுந்து சென்று பார்த்த போது மர்ம ஆசாமிகள் சிலர் வீட்டின் முன்புற கதவை உடைத்து திருட்டில் ஈடுபட முயற்சி செய்தது தெரியவந்தது.
தப்பி ஓட்டம்
இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் சத்தம் போட்டுள்ளனர். இந்த சத்தத்தை கேட்டு வீட்டின் முன்புற கதவின் பூட்டை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்த மர்ம ஆசாமிகள் வீட்டின் காம்பவுண்டு சுவரை ஏறி குதித்து அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.
இதையடுத்து உடனடியாக காங்கயம் போலீஸ் நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த காங்கயம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
தனிப்படை
மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காங்கயம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையில் தனிப்படை அமைத்து, காங்கயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், பாலமுருகன், கார்த்திக்குமார் மற்றும் போலீசார் குழுவாக செயல்பட்டு திருட்டில் ஈடுபட முயன்ற மர்ம ஆசாமிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
11 பேர் கைது
இந்த நிலையில் காங்கயம் எண்ணெய் ஆலை உரிமையாளர் வீட்டில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதாக கோவையை சேர்ந்த மணிகண்டன் (33), பிரேம்குமார் (42), பெரியசாமி (42), கடலூரை சேர்ந்த கோவிந்தராஜ் (28), கிருஷ்ணராஜ் (22), கார்த்திகேயன் (26), திருச்சியை சேர்ந்த ஜெயசீலன் (21), முகைதீன் அப்துல் காதர் (25), ஜோசுவா ராஜேஷ்குமார் (21), ராம்குமார் (20), சேலத்தை சேர்ந்த பிவின் ஜோஷ் (23) ஆகிய 11 பேரை கோவையில் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.