அதிக பாரம் ஏற்றி வந்த 11 டாரஸ் லாரிகள் பறிமுதல்
பணகுடி அருகே அதிக பாரம் ஏற்றி வந்த 11 டாரஸ் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பணகுடி:
செங்கோட்டை வழியாக கேரளாவிற்கு டாரஸ் லாரிகளில் கனிம வளங்கள் கடத்தப்பட்டு வந்தது. தற்போது அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் வள்ளியூர், பணகுடி, நாகர்கோவில் வழியாக டாரஸ் லாரிகளில் கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருவதாக ராதாபுரம் தாசில்தார் வள்ளிநாயகத்திற்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் நேற்று முன்தினம் அவர் வருவாய் துறையினருடன் தெற்கு வள்ளியூர்- கலந்தபனை நான்குவழிச்சாலையில் கனிம வளங்கள் ஏற்றி வந்த டாரஸ் லாரிகளை சோதனை செய்தார். அப்போது முறையான ஆவணங்கள் இல்லாமலும், அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக கனிமவளங்கள் ஏற்றி வந்ததாகவும் 11 டாரஸ் லாரிகளை பறிமுதல் செய்து பணகுடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 11 டாரஸ் லாரி டிரைவர்களை கைது செய்தனர். பின்னர் லாரி டிரைவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.