2-ம் நிலை காவலர் தேர்வை 11 ஆயிரத்து 641 பேர் எழுதுகின்றனர்


2-ம் நிலை காவலர் தேர்வை 11 ஆயிரத்து 641 பேர் எழுதுகின்றனர்
x
தினத்தந்தி 26 Nov 2022 6:45 PM GMT (Updated: 26 Nov 2022 6:45 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில்நடைபெற உள்ள 2-ம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வை 2 ஆயிரத்து 249 பெண்கள் உள்பட 11 ஆயிரத்து 641 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற உள்ள 2-ம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வை 2 ஆயிரத்து 249 பெண்கள் உள்பட 11 ஆயிரத்து 641 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை 2-ஆம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு நடக்கிறது. இந்த எழுத்து தேர்வில் காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி அபிராமி மஹாலில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில் காவலர் எழுத்து தேர்வில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் ஒவ்வொருவரும் என்னென்ன பணிகள், எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுரை வழங்கினார்.

11,641 பேர்...

இந்த எழுத்து தேர்வு தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 8 தேர்வு மையங்களில் நடக்கிறது. இதில் 2 ஆயிரத்து 249 பெண்கள் உட்பட 11 ஆயிரத்து 641 பேர் தேர்வு எழுதுகின்றனர். இந்த எழுத்து தேர்வையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மேற்பார்வையில் 2 உதவி போலீஸ் சூப்பிரண்டுகள், 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 34 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 1000 போலீசார் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதில் தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், தூத்துக்குடி ஊரக உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ், விளாத்திகுளம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா, துணை சூப்பிரண்டுகள் மாயவன், லோகேஸ்வரன், மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு பொன்னரசு, நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு சம்பத், மதுவிலக்கு அமலாக்க பிரிவு சிவசுப்பு, மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து, மாவட்ட காவல் துறை அலுவலக அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரிகள் குமார், சிவஞானமூர்த்தி, அலுவலக கண்காணிப்பாளர்கள் செல்வகுமார், மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு

இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் அடங்கிய பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னையில் இருந்து தூத்துக்குடி கொண்டு வரப்பட்டது. வினாத்தாள் அடங்கிய பெட்டிகள் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாக அறையில் வைக்கப்பட்டது.

அந்த அறையை மாவட்ட சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் அறை சீல் வைக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்ட அறை முன்பு ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story