11 வகையான புதிய முதுகலை பாடப்பிரிவுகள் தொடக்கம்


11 வகையான புதிய முதுகலை பாடப்பிரிவுகள் தொடக்கம்
x

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 11 வகையான புதிய முதுகலை பாடப்பிடிவுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதில் பிளஸ்-2 முடித்தவர்கள் நேரடியாக சேரலாம் என்றும் துணைவேந்தர் ஆறுமுகம் தெரிவித்தார்.

வேலூர்

பட்டமளிப்பு விழா

திருவள்ளுவர் பல்கலைக்க துணைவேந்தர் டி.ஆறுமுகம் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில அடுத்த மாதம் (ஜூன்) 19-ந் தேதி 17-வது பட்டமளிப்பு விழா நடக்கிறது. இதில் தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்துகொண்டு 1 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். சிறப்பு விருந்தினர்களாக மத்திய சாலை மற்றும் விமான போக்குவரத்து துறை இணை மந்திரி வி.கே.சிங், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.

புதிய பாடபிரிவுகள்

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இந்த கல்வி ஆண்டு, முதல் பிளஸ்-2 முடித்தவர்கள் நேரடியாக 5 ஆண்டு முதுகலை பட்டப்படிப்பில் சேரலாம். புதிதாக தமிழ், ஆங்கிலம், பொருளியல், விலங்கியல், வேதியியல், கணிதவியல், இன்பர்மேஷன் டெக்னாலஜி, நிறுவன செயலாண்மை, பயன் முறை இயற்பியல் உள்பட 11 பட்டப்படிப்புகளும், 3 முதுநிலை ஓராண்டு பட்டப்படிப்புகளும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த படிப்புகளுக்கு நாளை 31-ந் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதை மேலும் 15 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முறைகேடு நடக்கவில்லை

திருவள்ளுவர் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் பயின்ற மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக கூறியிருப்பது தவறானது. எந்த ஒரு மாணவருக்கும் கல்லூரிகள் மூலமே மதிப்பெண் வழங்க முடியும்.

பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பெயரில் ஒரு இருக்கையும், திருவள்ளுவர் பெயரில் ஒரு இருக்கையும் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிதி கிடைத்தவுடன் இவை செயல்பாட்டுக்கு வரும். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அரசு கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது, பல்கலைக்கழக பதிவாளர் விஜயராகவன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சந்திரன், வளாக இயக்குனர் ரவிச்சந்திரன் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story