இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 11 ஆண்டுகள் சிறை-அரியலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு


இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 11 ஆண்டுகள் சிறை-அரியலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு
x

திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் மகிளா கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு கூறினார்.

அரியலூர்

இளம்பெண் பலாத்காரம்

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 23). இவர் இளம் பெண் ஒருவரை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ந் தேதி அந்த பெண்ணின் சகோதரிக்கு குழந்தை பிறந்ததால் அவரது பெற்றோர் அந்த பெண்ணை வீட்டில் விட்டுவிட்டு மருத்துவமனைக்கு சென்றனர்.

காதலியின் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த ஆனந்தராஜ் அவரது வீட்டிற்குள் சென்று இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அவரை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த இளம்பெண்ணிடம் பேசுவதை தவிர்த்து வந்த ஆனந்தராஜ் அவரை திருமணம் செய்யவும் மறுத்துள்ளார்.

கைது

இதனால் பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண் ஆனந்தராஜின் பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அந்த இளம்பெண்ணை ஏற்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் இருவீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் கடந்த 2019-ம் ஆண்டு ஆனந்தராஜை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கின் விசாரணை அரியலூரில் உள்ள மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

11 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் குற்றவாளி ஆன்ந்தராஜுக்கு வன்புணர்ச்சி செய்ததற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும், நம்ப வைத்து ஏமாற்றியதற்காக ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் வழங்கி தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு சார்பில் வக்கீல் ராஜா ஆஜராகி வாதாடினார்.

இதனைதொடர்ந்து குற்றவாளி ஆனந்தராஜை போலீசார் பலத்த பாதுகாப்புடன் சிறைச்சாலைக்கு அழைத்து சென்றனர்.


Next Story