குமரியில் மகா சிவராத்திரியையொட்டி110 கிலோ மீட்டர் சிவாலய ஓட்டத்திற்கு தயாராகும் பக்தர்கள் சைவ, வைணவ ஒற்றுமையை விளக்கும் வரலாற்று சிறப்பு கொண்டது
கன்னியாகுமரி மாவட்டத்தில் சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவாலய ஓட்டத்திற்கு பக்தர்கள் தயாராகி வருகின்றனர்.
குலசேகரம்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவாலய ஓட்டத்திற்கு பக்தர்கள் தயாராகி வருகின்றனர்.
சிவாலய ஓட்டம்
குமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரி நாளில் பக்தர்கள் சிவபெருமானின் அருள் வேண்டி இங்குள்ள 12 சிவாலயங்களில் நடையும், ஓட்டமு மாகச் சென்று வழிபடுவதே சிவாலய ஓட்டம் எனப்படுகிறது.
இதற்காக பக்தர்கள் முன்சிறை அருகே உள்ள திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்கி திக்குறிச்சி மகாதேவர், திற்பரப்பு வீரபத்திரர், திருநந்திக்கரை நந்தீஸ்வரர், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர், திருப்பன்னிப்பாகம் மகாதேவர், கல்குளம் நீலகண்டசுவாமி, மேலாங்கோடு மகாதேவர், திருவிடைக்கோடு மகாதேவர், திருவிதாங்கோடு மகாதேவர், திருப்பன்றிகோடு மகாதேவர், திருநட்டாலம் சங்கரநாராயணர் ஆகிய 12 சிவாலயங்களில் ஓட்டமாகச் செல்வார்கள். இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் குமரி மாவட்டத்தில் பல நூற்றாண்டாக நடைபெறும் இந்த ஓட்டம் ஒரு முக்கிய நிகழ்வாகும்.
110 கி.மீ. தூரம்
சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் மாசி மாதம் ஏகாதசி நாளில் மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். அப்போது இவர்கள் காலை, மாலை வேளைகளில் குளித்து சிவன் கோவில்களுக்கு சென்று சிவநாமத்தை உச்சரித்து பிரார்த்தனை செய்வதுண்டு. சைவ வகை உணவுகளை மட்டுமே உட்கொள்வார்கள். பின்னர் சிவராத்திரி தினத்திற்கு முந்தைய நாளில் காவி உடை அணிந்து விபூதி பூசி, கையில் விசிறியுடன் கோபாலா... கோவிந்தா... என்ற நாம கோஷத்துடன் திருமலை மகாதேவர் கோவிலில் தொடங்கி ஒவ்வொரு கோவிலாக ஓடியவாறு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். 110 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த நீண்ட ஓட்டத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்பார்கள்.
இந்த சிவாலய ஓட்டத்தில் பங்கேற்க கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். பழங்காலத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து பக்தர்களும் நடந்தும், ஓடியும் சென்றுள்ளனர். அண்மை வருடங்களாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே நடந்தும், ஓடியும் செல்கின்றனர். பெரும்பாலானோர் இரு சக்கர வாகனங்கள் மற்றும் வேன், பஸ் போன்ற வாகனங்களில் இந்த ஓட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்த ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் கோவிலில் உள்ள குளத்தில் குளித்து விட்டு சாமி தரிசனம் செய்ய வேண்டுமென்பதும் தங்கள் கையில் வைத்திருக்கும் விசிறியால் சுவாமிக்கு வீசிக் கொடுக்க வேண்டுமென்பது ஐதீகம்.
சிவாலய ஓட்டத்திற்கான கதை
சிவாலய ஓட்டம் தொடர்பாக பக்தர்கள் மத்தியில் 2 விதமான கதைகள் கூறப்படுகிறது. இதில் மகாபாரதத்துடன் தொடர்புடைய, தருமரின் யாகம் ஒன்றிற்கு புருஷா மிருகத்தின் பால் பெற பீமன் சென்ற கதை மற்றும் சூண்டோதரன் என்ற அரக்கன் தவம் செய்து சிவ பெருமானிடம் வரம் பெற்ற பின்னர் அந்த வரத்தை சிவபெருமானிடமே சோதித்து பார்க்க முயலும் போது சிவபெருமான் கோபாலா.. கோவிந்தா என்று கூறியவாறு ஓடியதும், இறுதியில் மோகினி அவதாரமெடுத்து வந்த விஷ்ணு சூண்டோதரனை அழிக்கும் கதை சொல்லப்படுகிறது.
இதில் மகாபாரதத்துடன் தொடர்புடைய கதையில், புருஷா மிருகத்தின் பால் பெற சென்ற பீமன், கிருஷ்ணனின் உபதேசப் படி உத்திராட்ச கொட்டைகளை போட்ட இடங்களே சிவத் தலங்களாயிற்று என்றும், சூண்டோதரன் கதையில் சிவபெருமான் பதுங்கி மறைவாக இருந்த இடங்களே சிவத்தலங்களாயிற்று என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள்.
சந்தனம்-விபூதி
சிவாலய ஓட்டத்தின் முதல் கோவிலான முன்சிறை மகாதேவர் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தனம் வழங்கப்படுகிறது. ஓட்டம் நிறைவடையும் திருநட்டாலம் சங்கரநாராயணர் கோவிலில் பிரசாதமாக விபூதி வழங்கப்படுகிறது.
திருநட்டாலம் கோவிலில் சுவாமி சிவன்-விஷ்ணு என சங்கர நாராயணர் வடிவத்தில் எழுந்தருளியுள்ள நிலை சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றுவதாக உள்ளது.
17-ந் தேதி...
இந்த வருடம் சிவராத்திரி தினம் வருகிற 18-ந் தேதியாக உள்ள நிலையில் மாவட்டத்தில் சிவாலயங்களுக்கு நடந்தும், ஓட்டமுமாகவும் செல்லும் பக்தர்கள் 17-ந் தேதி பிற்பகலில் ஓட்டத்தை தொடங்குகின்றனர். 19-ந் தேதி காலையில் சிவாலய ஓட்டத்தை பக்தர்கள் நிறைவு செய்வார்கள்.கடந்த சில ஆண்டுகளாக கொேரானா தொற்றும் அச்சமும் மக்கள் மத்தியில் இருந்த நிலையில் சிவாலய ஓட்ட பக்தர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்தநிலையில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு அதிகமான பக்தர்கள் சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயத்தில் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெருக்கடி இல்லாத சாலை வசதி, தடையற்ற மின்சாரம், தண்ணீர் மற்றும் கழிவறை வசதிகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.