திருட்டு, காணாமல் போன 110 செல்போன்கள் மீட்பு
கோவையில் ஒரு மாதத்தில் திருட்டு, காணாமல் போன 110 செல்போன்கள் மீட்கப்பட்டது
கோவை மாவட்டத்தில் காணாமல் மற்றும் திருட்டு போன செல்போன்கள் சைபர் கிரைம் போலீசாரால் மீட்கப்பட்டன. அவற்றை உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கலந்து கொண்டு மீட்கப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 110 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவை மாவட்டத்தில் மொத்தம் 1,564 சிலைகள் வைக்கப்பட உள்ளன. 1,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் 5 மாதங்களில் நடந்த கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக 4,222 வழக்கு பதிவு செய்யப்பட்டது. 4,833 பேர் கைது செய்யப்பட்டனர்.
203 கஞ்சா வழக்குகளில் 285 பேர் கைது செய்யப்பட்டு 313 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 224 திருட்டு வழக்குகளில் 252 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.