சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,100 சிறப்பு பஸ்கள் இயக்கம்


சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,100 சிறப்பு பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 9 Aug 2023 3:18 AM IST (Updated: 9 Aug 2023 1:23 PM IST)
t-max-icont-min-icon

வார விடுமுறை, சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னை,

அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வார இறுதி நாளான இரண்டாம் சனிக்கிழமை (12-ந் தேதி) மற்றும் ஞாயிற்றுக்கிழமையை (13-ந் தேதி) தொடர்ந்து, வருகிற 15-ந் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அரசு விடுமுறை தினம் என்பதால் அரசுத்துறை மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் ஒரு நாள் விடுப்பு எடுக்கும்பட்சத்தில் தொடர்ந்து 4 நாட்கள் விடுப்பு கிடைப்பதால் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கும், சுற்றுலா செல்வதற்கும் மற்றும் ஆடி மாதம் கோவில் திருவிழாக்களுக்கு செல்லவும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

தற்போது பயணிகள் முன்பதிவும் கூடுதலாகவே உள்ளது. வெளி ஊர்களுக்கு செல்லும் பயணிகள் முன்பதிவு செய்வதன் மூலம் பயணிகளின் கூடுதல் தேவையை அறிந்து அதற்கு ஏற்றவாறு கூடுதல் பஸ்களை போக்குவரத்துக் கழகங்கள் இயக்க திட்டமிட இயலும். மேலும், பயணிகள் சிரமமின்றி, பாதுகாப்பாக திட்டமிட்டபடி பயணிக்கவும் உடனடியாக முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

8-ந் தேதியில் (நேற்று) வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமை வரை பயணிகள் அதிகளவில் முன்பதிவு செய்துள்ளனர். இதனைக்கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

1,100 சிறப்பு பஸ்கள்

இதுநாள் வரை சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து பயணம் மேற்கொள்ள 11-ந் தேதி 18,199 பயணிகளும், 12-ந் தேதி 6,949 பயணிகளும் மற்றும் 13-ந் தேதி 4,514 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். பயணிகள் எந்தவித சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 11-ந் தேதி கூடுதலாக 500 பஸ்களும் மற்றும் 12-ந் தேதி 200 பஸ்களும் இயக்கப்படுகின்றன. இதேபோன்று கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவிலிருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 1,100 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 12,257 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். சிறப்பு பஸ் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story