112 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
திருச்சி, புதுக்கோட்டை உள்பட 5 மாவட்டங்களில் 112 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சி, ஜூன்.18-
திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. சந்தோஷ்குமார் உத்தரவின் பேரில், திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தார் மேற்பார்வையில், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக திருச்சி மாவட்டத்தில் 6 வழக்குகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 வழக்குகளும், கரூர் மாவட்டத்தில் 7 வழக்குகளும், பெரம்பலூர் மாவட்டத்தில் 20 வழக்குகளும், அரியலூர் மாவட்டத்தில் 23 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 112.293 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.94 ஆயிரத்து 514 ஆகும். மேலும் இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.