புதுச்சத்திரம் அருகேகாரில் கடத்திவரப்பட்ட 112 லிட்டர் சாராயம் பறிமுதல்3 பேர் தப்பியோட்டம்
புதுச்சத்திரம் அருகே காரில் கடத்திவரப்பட்ட 112 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிதம்பரம்,
புதுச்சத்திரம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வினோதா, சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் புதுச்சத்திரம் அடுத்த கீழ்பூவாணிக்குப்பம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை போலீசார் சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் காரில் வந்த பெண் உள்ளிட்ட 3 பேரும் சற்று முன்னதாகவே காரை நிறுத்திவிட்டு, இறங்கி தப்பியோடி விட்டனர். இதைபார்த்த போலீசார் அவர்களை விரட்டிச் சென்றனர். இருப்பினும் அவர்களை பிடிக்க முடியவில்லை. அதைத்தொடர்ந்து போலீசார், காரை சோதனையிட்டபோது, அதில் 112 லிட்டர் புதுச்சேரி சாராயம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், சாராயம் மற்றும் அதனை கடத்தி வர பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய நபர்கள் யார்? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.