1,130 வீரர்களுக்கு ரூ.16 கோடி ஊக்கத்தொகை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்


1,130 வீரர்களுக்கு ரூ.16 கோடி ஊக்கத்தொகை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
x

சர்வதேச, தேசிய போட்டிகளில் வெற்றி பெற்ற 1,130 வீரா்-வீராங்கனைகளுக்கு ரூ.16 கோடி ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழக வீரர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார்கள்.

அவ்வாறு சாதனை படைக்கும் வீரர்களுக்கு தமிழக அரசு சார்பில் விருதுகளும், ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

மு.க.ஸ்டாலின்

இதன்படி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சர்வதேச, தேசிய போட்டிகளில் சாதித்த தமிழகத்தை சேர்ந்த வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதல்-அமைச்சர் விருது, சர்வதேச, தேசிய போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான தகவல் மையம், முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிக்குரிய இணையதள முன்பதிவு வசதி தொடக்க விழா ஆகியவை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று காலை நடந்தது.

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கான தகவல் தொடர்பு மையம், முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிக்குரிய இணையதள வசதி ஆகியவற்றை பொத்தானை அழுத்தி தொடங்கிவைத்தார். அத்துடன் 2018-19, 2019-20-ம் ஆண்டுக்கான சிறந்த வீரர், வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்ட பிரித்வி சேகர், ஜீவன் நெடுஞ்செழியன், பிரஜ்னேஷ் குணேஸ்வரன் (டென்னிஸ்), மோகன் குமார் (தடகளம்), நிவேதா (துப்பாக்கி சுடுதல்), சுனைனா (ஸ்குவாஷ்), அனுசுயா பிரியதர்ஷினி (தேக்வாண்டோ), செலீனா தீப்தி (டேபிள் டென்னிஸ்), சிறந்த பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்ட சத்குரு தாஸ் (துப்பாக்கி சுடுதல்), ஜி.கோகிலா, முகமது நிஜாமுதீன் (தடகளம்), எஸ்.கோகிலா (கால்பந்து) மற்றும் சிறந்த உடற்கல்வி ஆசிரியர், சிறந்த நடுவர், சிறந்த ஒருங்கிணைப்பாளர் என்று தேர்வு செய்யப்பட்ட 19 பேருக்கு முதல்-அமைச்சர் விருது மற்றும் அதற்குரிய ஊக்கத்தொகையையும், சர்வதேச, தேசிய போட்டிகளில் வெற்றி பெற்ற 1130 வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் ரூ.16.28 கோடி ஊக்கத்தொகையையும் வழங்கி பாராட்டினார்.

முதன்மை பெற வேண்டும்

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் கூறியதாவது:-

திராவிட மாடல் என்ற குறிக்கோளின்படி அனைத்து துறையும் வளர வேண்டும் என்பது எங்களது இலக்கு ஆகும். உலக அளவில் விளையாட்டு துறையில் தமிழ்நாடு முதன்மை பெற வேண்டும், நம்முடைய வீரர்கள் எல்லா சர்வதேச விளையாட்டுகளிலும் பங்கேற்க வேண்டும். பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு தமிழ்நாடு அரசு இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக 187 நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க வந்தார்கள். தமிழகத்தை உலகமே பார்த்து வியந்தது. தொடக்கத்தில் எத்தகைய திட்டமிடுதலோடு அதனை தொடங்கினோமோ அதே அளவு அக்கறையுடன் கடைசி நாள் வரை நடந்து கொண்டதால் தான் செஸ் ஒலிம்பியாட் போட்டி மாபெரும் வெற்றியை அடைய முடிந்தது. செஸ் ஒலிம்பியாட் போட்டியானது கிராமங்கள் முதல் நகரங்கள் வரை நம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே விளையாட்டின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆர்வத்தை இன்னும் தூண்டும் விதமாக தமிழ்நாடு அரசின் பெரும் முயற்சியால் கொண்டுவரப்பட்டுள்ள சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி சென்னையில் இப்போது நடந்து வருகிறது.

கபடி-சிலம்பம்

தற்போது மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த பேரார்வத்தினை மேலும் வளர்க்கும் வகையில் பல்வேறு விளையாட்டுகள் அடங்கிய முதல்-அமைச்சர் கோப்பை போட்டிகளுக்கான முன்பதிவு தொடங்கிவைக்கப்பட்டு இருக்கிறது. நம்முடைய பாரம்பரிய விளையாட்டுகளான கபடி மற்றும் சிலம்பம் ஆகியவற்றுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கபடி போட்டிகளுக்கான முன்பதிவு இன்று (நேற்று) தொடங்குகிறது. பிறபோட்டிகளுக்கான முன்பதிவும் படிப்படியாக தொடங்க இருக்கிறது. முதல் முறையாக இப்போட்டிகள் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் நடக்க இருக்கிறது. அடுத்த ஆண்டு முதல் ஜூன் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கி பொங்கல் வரைக்கும் இந்த போட்டி நடக்கும்.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடும் மாணவ, மாணவியரை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் சேர்த்து, அவர்களுக்கு உயரிய பயிற்சிகள் வழங்கவும், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் வெற்றி பெற தயார் செய்யவும் ஆணையிடப்பட்டிருக்கிறது.

'ஆடுகளம்' தகவல் மையம்

மேலும் 'ஆடுகளம்' என்ற பெயரில் விளையாட்டு வீரர்களுக்கான தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. வீரர்களின் கோரிக்கைகள், ஆலோசனைகள் புகார்கள் உள்ளிட்டவற்றை கேட்டறிந்து அவற்றுக்கான மேல் நடவடிக்கைகளையும், தீர்வுகளையும், விரைவாக வழங்கிடும் மையமாக இது அமையும். ஏற்கனவே நடந்து முடிந்துள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களுக்கு, குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியாளர்கள் மற்றும் கிராண்ட்மாஸ்டர்கள் மூலம் நேரடி மற்றும் இணையவழி பயிற்சிகள் வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்கப்படுத்துவதை போல தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் விளையாட்டுகள் கண்டறியப்பட்டு அவற்றுக்கும் தகுந்த ஊக்கம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தடைகளை உடைத்து...

களமாட விரும்பும் இளைய தலைமுறை வெற்றி வாகை சூட அனைத்து வழி வகைகளையும் தமிழ்நாடு அரசு நிச்சயமாக உருவாக்கித்தரும். நீங்கள் அடையும் வெற்றியும், பெருமையும் உங்களுக்கானது மட்டுமல்ல, தமிழ்நாடும், இந்தியாவும் அடையக்கூடிய வெற்றி. எனவே, உங்களது கடமையும் பெரிது, உங்களுடைய பொறுப்பும் பெரிது. அதை உணர்ந்து தடைகளை தகர்த்து, சாதனைகளை படைத்திடுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, சிவ.வீ.மெய்யநாதன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, பரந்தாமன் எம்.எல்.ஏ., தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை முதன்மை செயலாளர் அபூர்வா, எஸ்.டி.ஏ.டி. துணைத்தலைவர் அசோக் சிகாமணி, உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story