கடந்த ஆண்டில் கந்துவட்டி வசூலித்த 116 பேர் கைது


கடந்த ஆண்டில் கந்துவட்டி வசூலித்த 116 பேர் கைது
x

கடந்த ஆண்டில் கந்துவட்டி வசூலித்த 116 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

திருச்சி:

116 பேர் கைது

தமிழக டி.ஜி.பி. உத்தரவின்பேரில், கந்துவட்டி மூலம் மக்கள் உயிரிழப்பை தடுப்பதற்கும், பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் ஆபரேஷன் கந்துவட்டி என்ற சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி கந்துவட்டி சம்பந்தமாக வரும் புகார்களுக்கு உடனடியாக துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்டங்களில் கந்துவட்டி வசூல் தொடர்பாக 77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 39 வீடுகளில் சோதனை செய்யப்பட்டு சொத்துப்பத்திரங்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புகார்கள் மீது நடவடிக்கை

நடப்பாண்டில் இதுவரை கந்துவட்டி தொடர்பான 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், பொதுமக்களை ஏமாற்றிய நபர்களின் வீட்டில் சோதனை மேற்கொண்டு, வெற்று ஆவணங்கள் மற்றும் சொத்து பத்திரங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும், கைது செய்யப்படாத குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதற்கும், கந்துவட்டி சம்பந்தமான குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் வீடுகளில் சோதனை செய்வதற்கும் துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கந்துவட்டி புகார்கள் எவர் மீதேனும் வந்தால் சட்டப்படியாக துரிதமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Next Story