ரூ.12 கோடியில் திருமலைநாயக்கர் மகால் புனரமைப்பு பணிகள்- அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு


ரூ.12 கோடியில் திருமலைநாயக்கர் மகால் புனரமைப்பு பணிகள்- அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
x
தினத்தந்தி 6 Oct 2023 6:11 AM IST (Updated: 6 Oct 2023 6:59 AM IST)
t-max-icont-min-icon

ரூ.12 கோடியில் திருமலைநாயக்கர் மகால் புனரமைப்பு பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

மதுரை


திருமலைநாயக்கர் மகால்

மதுரை திருமலை நாயக்கர் மகாலில் புனரமைப்பு பணி நடந்து வருகிறது. அதனை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- திருமலைநாயக்கர் மகால் புனரமைப்பு பணி ரூ.12 கோடி செலவில் நடந்து வருகிறது. இங்குள்ள தர்பார் ஹால், பள்ளியறை, நாடக சாலை, நூலகம் ஆகியவை பழமை மாறாமல் புனரமைக்கப்படுகின்றன. இங்குள்ள தளத்திற்கு போடக்கூடிய கற்கள் அனைத்தும் கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து கொண்டு வரப்படும்.

வருமானவரி சோதனை

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித்துறையின் சோதனை மாதம் மாதம், வாரம் வாரம் நடைபெறுகிறது. இதுகுறித்து மத்திய அரசை கேட்டால் வருமானவரி சோதனை, எங்களது பணி என்று சொல்வார்கள்.

எங்களை கேட்டால் பழிவாங்கும் நடவடிக்கைகள் என சொல்வோம். நாடாளுமன்ற தேர்தல் வரும் நிைலயில், வருமான வரித்துறை சோதனைகளை தவிர்த்து இருக்கலாம். தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் பன்முகம் கொண்டவர். அவர் வெறும் எம்.பி. மட்டுமல்ல. கல்வியாளர், தொழில் அதிபர் ஆவார். பலமுறை இதுபோன்ற சோதனைகளை ஜெகத்ரட்சகன் சந்தித்து இருக்கிறார்.

இந்த வருமானவரி சோதனை என்பது தி.மு.க.வை அச்சுறுத்தும் செயல். ஆனால் இது போன்ற அச்சுறுத்தலுக்கு அஞ்ச மாட்டோம். சட்டப்படி எதையும் சந்திப்போம்.

விரைவில் மேம்பால பணிகள்

மதுரை வைகை ஆற்றங்கரையில் மீதமுள்ள சாலைப்பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க. ஆட்சியை விட்டு செல்லும் போது ரூ.6 லட்சத்து 28 ஆயிரம் கோடி கடனை வைத்துவிட்டு போய்விட்டார்கள். அதற்கு ஆண்டுக்கு ரூ.48 ஆயிரம் கோடியை தமிழக அரசு வட்டி கட்டி வருகிறது, இப்படிப்பட்ட சூழலிலும் மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்களை முதல்-அமைச்சர் செய்து வருகிறார்.

கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. மதுரை கோரிப்பாளையம் மற்றும் அப்பல்லோ சந்திப்பு மேம்பாலப் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது கலெக்டர் சங்கீதா, எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், வெங்கடேசன், தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்பட பலர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story