12 மணி நேர ேவலை மசோதா நகலை எரித்து மறியல் போராட்டம்

12 மணி நேர ேவலை மசோதா நகலை எரித்து மறியல் போராட்டம்
கோவை
கோவை கலெக்டர் அலுவலகம் முன் 12 மணி நேர வேலை மசோதா நகலை தீ வைத்து எரித்து, சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 மணி நேர வேலை
தமிழக அரசு வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தி சட்ட மசோதா நிறைவேற்றி உள்ளது. இந்த 12 மணி நேர வேலை மசோதாவிற்கு பல்வேறு கட்சிகள், தொழிலாளர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் 12 மணி நேர வேலை மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர்.
இதன்படி கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் நேற்று காலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திரண்டனர். பின்னர் அவர்கள் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர்.
மறியல் போராட்டம்
இந்த ஊர்வலத்திற்கு மாவட்ட தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். செயலார் அர்ஜூன், பொருளாளர் தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் கலெக்டர் அலுவலகம் அருகே வந்த போது ஊர்வலத்தில் வந்தவர்கள் 12 மணி நேர வேலை மசோதா நகலை தீ வைத்து எரித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்று வேனில் ஏற்றி கைது செய்தனர். இதன்காரணமாக கலெக்டர் அலுவலகம் முன் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.அதன்படி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 50 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.






