12 மணிநேர வேலை சட்ட மசோதா அதிகாரப்பூர்வமாக திரும்ப பெறப்பட்டது..!
12 மணிநேர வேலை சட்ட மசோதா அதிகாரப்பூர்வமாக திரும்ப பெறப்பட்டுள்ளது.
சென்னை,
தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்ற சட்டம் அமலில் இருந்து வருகிறது. வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்ட மசோதா கடந்த மாதம் 21-ந்தேதி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தி.மு.க. கூட்டணி கட்சிகளும், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தன. இதனையடுத்து அமைச்சர்கள் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் கடந்த 24-ந்தேதி ஆலோசனை நடத்தினர். அப்போது தி.மு.க. தொழிற்சங்கமாக தொ.மு.ச. உள்பட அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த சட்டத்துக்கு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதற்கிடையே சர்ச்சையை ஏற்படுத்திய 12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்றைய தினமே அறிவித்தார்.
இதையடுத்து 12 மணி நேர வேலை மசோதாவாபஸ் பெறப்படுவதாக மே தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மசோதா வாபஸ் குறித்த செய்தி பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் செய்திக்குறிப்பின் மூலமாக விரைவில் தெரிவிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 12 மணிநேர வேலை சட்ட மசோதா அதிகாரப்பூர்வமாக திரும்ப பெறப்பட்டுள்ளது. மசோதா திரும்பப்பெறப்படும் என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்பை அடுத்து, மசோதா அதிகாரப்பூர்வமாக திரும்பப்பெறப்பட்டுள்ளதாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சட்டப்பேரவை செயலகம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.