குமரியில் கனமழைக்கு 12 வீடுகள் இடிந்தன
குமரி மாவட்டத்தில் கனமழைக்கு 12 வீடுகள் இடிந்தன. 11 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கனமழைக்கு 12 வீடுகள் இடிந்தன. 11 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.
கன மழை
குமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. சிறிது நேரம் கன மழையும், சிறிது நேரம் சாரல் மழையும் என மாறி மாறி பெய்து வருகிறது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கோதையாறு, குற்றியார், மோதிர மலை ஆகிய பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியதால் மோதிரமலை- குற்றியார் தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் செல்கிறது.
மேற்கு மாவட்ட பகுதிகளில் ரப்பர் பால் வடிக்கும் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. மார்த்தாண்டத்தை அடுத்த திக்குறிச்சி பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ரப்பர் பாலுக்காக வைக்கப்பட்டு உள்ள சிரட்டையில் மழை நீர் தேங்கி உள்ளது. இதன் காரணமாக தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்துக்கு தடை
தொடர் மழையால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குழித்துறையில் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தடுப்பணையின் மீது 3 அடிக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் தடுப்பணையின் இரு பக்கமும் தடுப்புகள் அமைத்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
திற்பரப்பில் குளிக்க தடை
கன மழை காரணமாக திற்பரப்பு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாலை 3 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மாலையில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் செல்லாமல் இருப்பதற்காக கயிறு மூலமாக தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர்.
மேலும் குளிக்க தடை விதித்து திற்பரப்பு பேரூராட்சியில் இருந்து அறிவிப்பு பதாகை வைத்துள்ளனர்.
மீன்பிடிக்க செல்லவில்லை
குளச்சல் பகுதியில் பெய்து வரும் மழையால் வள்ளம் மற்றும் கட்டுமரங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. கடலில் தற்போது கணவாய், கிளாத்தி போன்ற மீன்கள் கிடைத்து வருகின்ற சமயத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லாதது அவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயம் ஒரு சில கட்டுமரங்கள் மீன்பிடிக்க சென்றன. எனினும் பெரிய அளவில் மீன்கள் கிடைக்காததால் குளச்சலில் மீன் வரத்து குறைந்தது. இதே போல் சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்களும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
இதற்கிடையே தொடர் மழை காரணமாக குளச்சல் ஜூம்மா பள்ளி வாசல் வளாகத்துக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் தொழுகைக்கு செல்பவர்கள் பெரும் இடையூறுக்கு ஆளாகி உள்ளனர். பள்ளிவாசல் வளாகத்தினுள் புகுந்த வெள்ளத்தை நிர்வாகிகள் மோட்டார் மூலம் வெளியேற்றினர்.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் உண்ணாமலை கடை பேரூராட்சி 7-வது வார்டுக்கு உட்பட்ட மாங்காய் விளை பகுதியில் ஓடையில் சென்ற தண்ணீர் பல வீடுகளை சூழ்ந்துள்ளது. இது தவிர மாவட்டத்தின் பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த வகையில் பழையாற்று கால்வாயில் தண்ணீர் சீறிப்பாய்ந்து ஓடுகிறது.
நாகா்கோவிலில் நேற்று முன்தினம் கொட்டி தீர்த்த கனமழையால் வடிவீஸ்வரம் பாறைக்கால்மடம் பகுதியில் சுமார் 10 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்த தண்ணீரை வெளியேற்ற மாநகராட்சி ஊழியர்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் டவுண் ரெயில் நிலைய முன் பகுதியிலும் மழை நீர் தேங்கி இருந்தது.
மரம் விழுந்தது
மேலும் கன மழைக்கு குமரி மாவட்டத்தில் 6 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. அதாவது மண்டைக்காடு பருத்திவிளையில் ஒரு ராட்சத புளியமரம் வேரோடு சாய்ந்து மண்டைக்காடு- லட்சுமிபுரம் சாலையில் விழுந்தது. இதன் காரணமாக அந்த சாலையில் வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மின் வயர்கள் அறுந்ததால் மின் தடையும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மரம் மிகவும் பெரியதாக இருந்ததால் அதை வெட்டி அகற்ற தீயணைப்பு வீரர்களுக்கு சவாலாக இருந்தது.
எனினும் சுமார் 6 மணி நேரம் போராடி மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனையடுத்து அங்கு போக்குவரத்து சீரானது. பின்னர் மின் வயர்களை சரிசெய்யும் பணிகள் நடந்தன.
12 வீடுகள் இடிந்தன
இதே போல பருத்திவிளையில் ஒரு மரமும், புதுக்கடை அருகே கருங்காவிளையில் ஒரு மரமும், கருங்கல் சாலையில் வட்டக்கோட்டை பகுதியில் ஒரு மரமும், திங்கள்சந்தை மணவிளையில் ஒரு வேப்ப மரமும், ஆசாரிவிளையில் ஒரு தென்னை மரமும். உன்னங்குளத்தில் ஒரு வேப்ப மரமும் வேரோடு சாய்ந்தது. அவ்வாறு விழுந்த மரங்களை அந்தந்த பகுதி தீயணைப்பு வீரர்கள் வெட்டி அகற்றினர். அந்த வகையில் மொத்தம் 11 இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆனால் இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதே சமயம் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. அவற்றை அந்தந்த பகுதி மக்களே வெட்டி அப்புறப்படுத்தி விட்டனர். அந்த வகையில் நாகர்கோவில் இடலாக்குடியில் உள்ள பள்ளிவாசல் காம்பவுண்டு சுவரில் மரக்கிளை முறிந்து விழுந்தது. அதை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அகற்றினர்.
இது ஒருபுறம் இருக்க குமரி மாவட்டத்தில் பெய்த கன மழைக்கு நேற்று மாலை 4 மணி நிலவரப்படி மொத்தம் 12 வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் தோவாளை தாலுகாவில் வீடு இடிந்து வேலப்பன் என்பவர் பலியாகியுள்ளார். பூதப்பாண்டி அருகே உள்ள கீழ கேசவன்புதூர் பகுதியில் சகாரிய என்பவரது வீட்டின் சுவரும் இடிந்து விழுந்தது. திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட தும்பகோடு பாலம் பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவரின் வீட்டு சுவரின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. மற்ற இடங்களில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
பள்ளிகளுக்கு விடுமுறை
குமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஏற்கனவே காலாண்டு விடுமுறையில் இருக்கும் நிலையில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை உள்ள மாணவர்களுக்கு நேற்று விடுமுறை அறிவித்து கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்.