பேராசிரியர் வீட்டில் 12 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு;ஸ்கூட்டருடன் தப்பிச்சென்ற மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


பேராசிரியர் வீட்டில் 12 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு;ஸ்கூட்டருடன் தப்பிச்சென்ற மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x

ஈரோட்டில் பேராசிரியர் வீட்டில் 12 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போனது. மேலும் வீட்டில் இருந்த ஸ்கூட்டருடன் தப்பிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு

ஈரோட்டில் பேராசிரியர் வீட்டில் 12 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போனது. மேலும் வீட்டில் இருந்த ஸ்கூட்டருடன் தப்பிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஓய்வுபெற்ற பேராசிரியர்

ஈரோடு கனிராவுத்தர் குளம் சின்னதோட்டம் பகுதியை சேர்ந்தவர் விஜயதுரை (வயது 62). ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர். இவருடைய மனைவி சாந்தி. இவரும் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு சுனந்தா என்ற மகளும், சரவணன் ஆதித்யா என்ற மகனும் உள்ளனர்.

சுனந்தாவும், அவருடைய தம்பி சரவணன் ஆதித்யாவும் மத்திய தொழில் பாதுகாப்பு படைப்பிரிவில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் சுனந்தாவுக்கு நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதற்காக அவரது குடும்பத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பே சென்னைக்கு சென்று விட்டனர். இதனால் வீடு பூட்டப்பட்டு கிடந்தது.

நகை -பணம் திருட்டு

இதற்கிடையில் நேற்று காலை விஜயதுரையின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் இதுபற்றி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, திறந்து கிடந்த வீட்டுக்குள் சென்று பார்வையிட்டனர். அப்போது வீட்டில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் அங்கும் இங்குமாக சிதறி கிடந்தன. பின்னர் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டில் பீரோவில் இருந்த 12 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

மேலும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஸ்கூட்டரையும் கொள்ளையர்கள் ஓட்டி சென்றுள்ளனர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நேற்றுமுன்தினம் வீட்டுக்குள் புகுந்து கைவரிசை காட்டி உள்ளது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்களும் வந்து, அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓய்வுபெற்ற பேராசிரியர் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story