நிதி நிறுவன அதிபர் வீட்டில் 12 பவுன் நகைகள் திருட்டு
கரூரில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் 12 பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
12 பவுன் நகைகள் திருட்டு
கரூர் வெங்கமேடு சுப்புகார்டன் பகுதியை சேர்ந்தவர் முத்தரசு (வயது 43). நிதி நிறுவன அதிபர். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பால்கனி கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்து உள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டினுள் சென்று பார்த்தார். அப்போது, வீட்டின் அலமாரியில் வைக்கப்பட்டு இருந்த 1 பவுன் தங்க மோதிரம், 1¼ பவுனவளையல், 2½ பவுன்தங்க சங்கிலி, 4,¼ பவுன் தங்க காயின், 3 பவுன் கம்மல் உள்பட மொத்தம் 12 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
வலைவீச்சு
இதுகுறித்து முத்தரசு வெங்கமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்யப்பட்டன. மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.