12 இளம்வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தம்


12 இளம்வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
x

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 1098 என்கிற இலவச தொலைபேசி எண்ணிற்கு வந்த தகவலின் அடிப்படையில் 12 இளம் வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்

ஆலோசனை கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழு மற்றும் குழந்தைகள் நலக்குழு ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில் பள்ளியில் இடைநின்ற மாணவ, மாணவிகளின் தற்போதைய நிலை, அதற்கான காரணம், குழந்தை திருமணம், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட வழிகாட்டுதல் உள்ளிட்டவை குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் இளம் வயது திருமணங்கள் நடைபெறாமல் தடுக்க தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் தங்கள் பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடவேண்டும். குழந்தை திருமண தடைசட்டத்தின்படி 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கோ, 21 வயது நிறைவடையாத ஆணுக்கோ திருமணம் செய்வது குற்றமாகும். இதை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

இளம்வயது திருமணங்கள் நிறுத்தம்

பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் தங்கள் பகுதியில் இளம்வயது திருமணம் நடைபெற உள்ளது குறித்த தகவல் தெரியவந்தால் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். கடந்த 3 மாதங்களில் இந்த எண்ணிற்கு வரப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் 12 இளம்வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளன. மேலும் நடைபெற்ற 20 இளம்வயது திருமணங்கள் தொடர்பாக திருமணத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தும் கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசினால் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு 'சீல்'வைக்கப்பட்டு வருகின்றன. மேலும் கடை உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதிஷ், மாவட்ட சமூக நல அலுவலர் கீதா, தொழிலாளர் நல உதவி ஆணையர் திருநந்தன் உள்பட அரசு அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story