80 கர்ப்பிணிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் ஊட்டச்சத்து தொகுப்பு
மயிலாடுதுறையில் 80 கர்ப்பிணிகளுக்கு தலா ரூ. 12 ஆயிரம் மதிப்பில் ஊட்டச்சத்து தொகுப்பை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.
மயிலாடுதுறையில் 80 கர்ப்பிணிகளுக்கு தலா ரூ. 12 ஆயிரம் மதிப்பில் ஊட்டச்சத்து தொகுப்பை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.
ஊட்டச்சத்து முகாம்
மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டை, நேதாஜி உண்டு உறைவிடப் பள்ளியில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் "பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து முகாம் நடந்தது. முகாமை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்து பேசியதாவது:-பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்தும் விதமாகவும் பெண் குழந்தைகள் கல்வி கற்பதை உறுதி செய்திடவும் இந்திய அரசால் 2015-ம் ஆண்டில் "பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் முதன் முதலாக கடலூர் மாவட்டத்தில் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்திலும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. பாலின பாகுபாட்டை நீக்கிடவும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மாவட்டத்தில் பிறப்பு பாலின விகிதத்தினை அதிகரிக்கவும், இறப்பினை ஆண்டுக்கு 1.5 புள்ளிகள் வீதம், கருக்கலைப்பு விகிதத்தினை குறைத்திடவும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கர்ப்பிணி பெண்களின் ஊட்டச்சத்தினை உறுதி செய்திடவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
80 கர்ப்பிணிகளுக்கு
அரசு துறைகளில் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் வாயிலாக மக்களிடையே பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், கல்வி, விளையாட்டு, கலைகள், அனைத்திலும் பெண் குழந்தைகளின் திறன் மேம்பாட்டிற்கு உதவுதல் போன்றவைகள் திட்டத்தின் அணுகுமுறை ஆகும் என்றார். அதனைத் தொடர்ந்து, 80 கர்ப்பிணிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்பிலான ஊட்டச்சத்து உணவுகள் அடங்கிய தொகுப்பினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
முகாமில், உதவி கலெக்டர் யுரேகா, மாவட்ட சமூகநல அலுவலர் சுகிர்தாதேவி, தாய்சேய் நல அலுவலர் அம்பிகா, குழந்தை வளர்ச்சி அலுவலர் கிருத்திகா, உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.