செவ்வாய்பேட்டையில் 12 டன் கலப்பட சீரகம், சோம்பு பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை


செவ்வாய்பேட்டையில்  12 டன் கலப்பட சீரகம், சோம்பு பறிமுதல்  உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை
x

செவ்வாய்பேட்டையில் 12 டன் கலப்பட சீரகம், சோம்பு ஆகியவற்றை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சேலம்

சேலம்,

பறிமுதல்

சேலம் செவ்வாய்பேட்டை சந்தைபேட்டை பகுதியில் குஜராத்தை சேர்ந்த கிரித்குமார் ராமன் லால் என்பவர் சீரகம், சோம்பு, கடுகு ஆகியவற்றை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்த பொருட்களில் அவர் கலப்படம் செய்து விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் அதிகாரிகள் நேற்று அந்த குடோனுக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது மூட்டைகளில் இருந்த சீரகம், சோம்பு ஆகியவற்றில் கலப்படம் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 8 ஆயிரத்து 250 கிலோ சீரகம், 4 ஆயிரத்து 180 கிலோ சோம்பு ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பழைய சோம்பு

குடோனில் இருந்து கலப்படம் செய்வதற்கு பயன்படுத்த வைக்கப்பட்டிருந்த வேதிபொருட்கள், செயற்கை கலர், மாவு பொருட்கள் மற்றும் கலப்படம் செய்து உலர்த்துவதற்கு வைக்கப்பட்ட விசிறிகள், எடை எந்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதவிர பறிமுதல் செய்யப்பட்ட உணவு பொருட்களின் மாதிரிகளை அதிகாரிகள் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் கூறும் போது, கிரித்குமார் ராமன் லால் என்பவர் வடமாநிலங்களில் இருந்து சீரகம், சோம்பு ஆகியவற்றை மொத்தமாக வாங்கி இங்கு விற்பனை செய்து வருகிறார். எடை அதிகரிப்பதற்காக சீரகத்தில் மண்ணை கலப்படம் செய்துள்ளார். மேலும் பழைய சோம்புகளை வாங்கி அதில் செயற்கை கலரை கலந்து கலப்படம் செய்து இருக்கிறார். இந்த கலப்படம் தொடர்பாக அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story