120 ஏக்கர் புழல் ஏரி நிலம் தனியார் பயன்பாட்டுக்கு மாற்றம்; அரசு உத்தரவை திரும்ப பெற எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
விதிகளுக்கு புறம்பாக 120 ஏக்கர் புழல் ஏரி நிலம் தனியார் பயன்பாட்டுக்கு மாற்றம் அரசு உத்தரவை திரும்ப பெற எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
சென்னை,
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஏற்கனவே தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற ஆயிரக்கணக்கான அபகரிப்பு நிலங்கள் அ.தி.மு.க. ஆட்சியின்போது பறிமுதல் செய்யப்பட்டு சொத்தை இழந்த அப்பாவி மக்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.
தற்போது ஆளும்கட்சியினர் அதிகாரத்தை பயன்படுத்தி தனியார் நிலங்களை மட்டுமல்ல அரசு நிலங்களையும், நீர்வழி புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமித்து வருகின்றனர்.
சென்னை புழல் ஏரியை ஒட்டி நீர்ப்பிடிப்பு பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ள 120 ஏக்கர் நிலத்தை விதிகளுக்கு புறம்பாக குறிப்பிட்ட சில தனியார் நிறுவன பயன்பாட்டுக்கு மாற்றலாம் என வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.
நீர்வழி ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற ஐகோர்ட்டு உத்தரவை மனதில் கொண்டு இந்த உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
ஆட்சியாளர்களின் மக்கள் விரோத செயல்களுக்கு, அதிகாரிகள் துணை போவதை கைவிட்டுவிட்டு நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். மக்கள் விரோத போக்கை தி.மு.க. அரசு கைவிடாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.