1,200 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்
1,200 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது.
அதிரடி சோதனை
திருச்சி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க பிரத்யேக செல்போன் எண் 9487464651 அறிவிக்கப்பட்டது. அந்த எண்ணுக்கு பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், தகவல் தெரிவிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இந்தநிலையில் துறையூர் பச்சமலை பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்த உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் கார்த்திக், விக்னேஷ் உள்ளிட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சாராய ஊறல்
இதில் சிலையூர் வன்னாடு கிராமத்தில் கார்த்தி என்ற இளையராஜா என்பவர் காட்டுப்பகுதியில் சாராயம் தயாரிக்க 8 பேரல்களில் வைத்திருந்த 1,200 லிட்டர் சாராய ஊறல் மற்றும் அருகே உள்ள கிராமங்களான கிணத்தூர், நொச்சிக்குளம், புதூர், தண்ணீர் பள்ளம், சின்ன வல்லம், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் விற்பனை செய்ய வைத்திருந்த 8 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக துறையூர் மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பின்னர் கைப்பற்றப்பட்ட சாராய ஊறல் மற்றும் சாராயம் நேற்று முன்தினம் இரவு கீழே கொட்டி அழிக்கப்பட்டது.
மண்ணச்சநல்லூரை அடுத்த அய்யம்பாளையம் சன்னாசி கொட்டாய் காட்டு பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து திருப்பதி என்பவரது தோட்டத்தில் சோதனை நடத்திய போலீசார், 6 லிட்டர் சாராயம் மற்றும் மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து திருப்பதியை தேடி வருகிறார்கள்.
70 பேர் கைது
இதேபோல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்றது தொடர்பாக கடந்த 6-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் மாவட்டம் முழுவதும் 63 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 70 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் பள்ளி, கல்லூரி பகுதிகளில் குட்கா விற்ற 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
மேற்கண்ட அனைத்து நடவடிக்கைகளும் பிரத்யேக செல்போன் எண்ணுக்கு புகார் அளித்து, அதன் மூலம் எடுக்கப்பட்டவையாகும். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும். எனவே பொதுமக்கள் அச்சமின்றி பிரத்யேக எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். இந்த தகவலை போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் தெரிவித்துள்ளார்.