விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி 1,200 போலீசார் பாதுகாப்பு


விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி 1,200 போலீசார் பாதுகாப்பு
x

வேலூரில் விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

வேலூர்

சிலைகள் ஊர்வலம்

வேலூரில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இந்த சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நாளை (புதன்கிழமை) நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.

ஊர்வலம் செல்லும் பாதைகளில் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நேற்று ஊர்வலப்பாதையினை ஆய்வு செய்தார். சத்துவாச்சாரி ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் இருந்து ஆய்வு மேற்கொண்ட அவர் சைதாப்பேட்டை மெயின்பஜார், லாங்கு பஜார் உள்ளிட்ட பாதைகள் வழியாக சதுப்பேரி ஏரி வரை சென்றார். அங்கு சிலை கரைக்கப்படும் இடத்தையும் பார்வையிட்டார்.

ஆய்வின்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மற்றும் இன்ஸ்பெக்டர்கள் உடன் இருந்தனர்.

1,200 போலீசார் பாதுகாப்பு

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தையொட்டி செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து போலீசார் கூறியதாவது:-

ஊர்வலத்தில் எந்தவித சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் முறையாக செயல்படுகிறதா? என்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ட்ரோன் கேமராக்கள் உதவியுடன் கண்காணிக்கப்படுகிறது. சிலைகள் உள்ள பகுதிகளை போலீசார் ரோந்து பணி மேற்கொண்டு கண்காணித்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story