ரெயில் நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 121 கிலோ கஞ்சா பறிமுதல் - ரெயில்வே காவல்துறை தகவல்
கடந்த 1-ம் தேதி முதல் தற்போது வரை ரெயில் நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 121.8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
ரெயில்வே காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, இ.கா.ப. காவல்துறை தலைமை இயக்குனர்/படைத்தலைவர், தமிழ்நாடு அவர்களின் உத்தரவின் பேரில் வி. வனிதா, இ.கா.ப. காவல்துறை கூடுதல் இயக்குனர், இருப்புப்பாதை, தமிழ்நாடு அவர்களின் மேற்பார்வையில் வி.பொன்ராமு, த.கா.ப. காவல் கண்காணிப்பாளர், இருப்புப்பாதை, சென்னை அவர்களின் கண்காணிப்பில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் சென்னை சென்ட்ரல், எழும்பூர், சேலம், கோயம்முத்தூர் ஆகியோரின் தலைமையில் தளிப்படைகள் அமைக்கப்பட்டு அனைத்து ரெயில் நிலையங்களிலும் கஞ்சா கடத்தலை தடுக்கவும், கஞ்சா கடத்துபவர்களை கைது செய்யவும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் "கஞ்சா வேட்டை 4.0" கடந்த 01.05.2023 ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு இதுவரை சென்னை மாவட்ட இரயில்வேக்குட்பட்ட சென்னை சென்ட்ரல், எழும்பூர், சேலம், கோயம்புத்தூர் ஆகிய உட்கோட்டங்களில் உள்ள ரெயில்வே காவல் நிலையங்களில் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மொத்தம் 121.8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு பெண் உட்பட 10 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட கஞ்சா சம்மந்தபட்ட அமலாக்கப் பணியகம் குற்றப் புலனாய்வுத் துறை (NIBCID, PEW) துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் வட மாநிலங்களில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடா மற்றும் ரேணிகுண்டா மார்கமாக தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து விரைவு ரெயில்களிலும் கஞ்சா, குட்கா, புகையிலை, மதுபாட்டில்கள் மற்றும் இதர தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுகிறதா என தனிப்படையினர் மூலமும் மற்றும் போதைப்பொருட்களை கண்டறியும் மோப்ப நாய் படை மூலமும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இரயில் நிலையங்களிலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.