ராஜபாளையம் பகுதியில் 121 மி.மீ. மழை கொட்டியது


ராஜபாளையம் பகுதியில் 121 மி.மீ. மழை கொட்டியது
x

ராஜபாளையம் பகுதியில் 121 மி.மீ. மழை கொட்டியது. ஆற்றில் அதிக நீர்வரத்தால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

விருதுநகர்

ராஜபாளையம்.

ராஜபாளையம் பகுதியில் 121 மி.மீ. மழை கொட்டியது. ஆற்றில் அதிக நீர்வரத்தால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

கன மழை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் கனமழை பெய்தது.

இதன் காரணமாக தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலை, அரசு மருத்துவமனை, காந்தி சிலை ரவுண்டானா, பழைய பஸ் நிலையம், காந்தி கலை மன்றம் உள்பட பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது.

பஞ்சு மார்க்கெட் நேரு சிலையில் இருந்து சொக்கர் கோவில் வரை நகரின் பிரதான சாலையோரம் சகதிக்காடானதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். அதேபோல சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சோழபுரம், முறம்பு, தளவாய்புரம், முகவூர், சேத்தூர், தேவதானம், சொக்கநாதன் புத்தூர், புத்தூர், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. ராஜபாளையம் பகுதியில் 121 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.

போக்குவரத்து பாதிப்பு

ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டியில் இருந்து புத்தூர் செல்லும் வழியில் கோரையாற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. மழைநேரத்தில் அருகே உள்ள நல்லமங்கலம் கண்மாயில் இருந்து இந்த தரைப்பாலம் வழியாகத்தான் மீனாட்சிபுரம் கண்மாய்க்கு தண்ணீர் செல்லும். இந்த பகுதியில் நீர்வரத்து அதிகமாக இருக்கும் பட்சத்தில் போக்குவரத்து பாதிக்கப்படும்.

இதனால் நெடுஞ்சாலை துறை சார்பில் இந்த தரைப்பாலத்தை உயர்த்தி ஓடைப்பாலமாக கட்டும் பணி நடைபெற்று வருகிறது. எனவே வாகனங்கள் செல்வதற்காக புதிதாக கட்டப்படும் ஓடைப்பாலத்தின் அருகே தற்காலிக தார்சாலை அமைக்கப்பட்டிருந்தது.

போக்குவரத்துக்கு தடை

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு கன மழை பெய்ததால் கோரையாற்றில் நீர் வரத்து அதிகரித்தது. எனவே தற்காலிக சாலையின் ஒரு பகுதி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.

எனவே பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த வழியே யாரும் செல்லக்கூடாது என போலீசார் தடை விதித்தனர். இதனால் புனல்வேலியில் இருந்து, ஜமீன் நல்ல மங்கலம், புத்தூர், மேலவரகுணராமபுரம், பொட்டல்பட்டி, இனாம் கோவில்பட்டி, சுப்பிரமணியபுரம், ராயகிரி, தென்மலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.


Related Tags :
Next Story