போக்குவரத்து விதிமீறிய 124 ஆம்னி பஸ்களுக்கு ரூ.3¼ லட்சம் அபராதம்


போக்குவரத்து விதிமீறிய 124 ஆம்னி பஸ்களுக்கு ரூ.3¼ லட்சம் அபராதம்
x

பொங்கல் பண்டிகையையொட்டி நடந்த சிறப்பு சோதனையில் போக்குவரத்து விதியை மீறிய 124 ஆம்னி பஸ்களுக்கு ரூ.3¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்

சிறப்பு சோதனை

பொங்கல் பண்டிகை கடந்த 15-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி வெளியூர்களில் வசிக்கும் பலர் தங்கள் குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு ரெயில், பஸ்களில் சென்றனர். அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே முடிந்து விட்டதால் பெரும்பாலானோர் பஸ்களில் ஊருக்கு சென்றனர். இதனை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும், பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்பேரில் வேலூர் சரக இணை போக்குவரத்து கமிஷனர் இளங்கோவன் மேற்பார்வையில் கிருஷ்ணகிரி, வாலாஜா, வாணியம்பாடி, பள்ளிகொண்டா ஆகிய சுங்கச்சாவடிகளின் அருகே சிறப்பு வாகன சோதனை நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெங்கடேசன், ராமலிங்கம், ராமகிருஷ்ணன் காளியப்பன், துரைசாமி ஆகியோரின் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், சிவக்குமார், ராஜேஷ்கண்ணா, அமர்நாத், விஜயகுமார், வெங்கட்ராகவன் ஆகியோர் 7 நாட்கள் சுழற்சி முறையில் சோதனையில் ஈடுபட்டனர்.

124 பஸ்களுக்கு அபராதம்

அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதா?, அதிகமான பயணிகள் பயணம் செய்கிறார்களா?, டிரைவர் சீருடை அணிந்துள்ளாரா?, தகுதிச்சான்று புதுப்பிக்கப்பட்டுள்ளதா?, முகப்பு விளக்கில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதா என்பது உள்பட பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டனர். மேலும் சாலை வரி, பிறமாநில ஆம்னி பஸ்கள் நுழைவு வரியை முறையாக செலுத்தி உள்ளார்களா என்றும் சோதனை செய்யப்பட்டது.

இந்த சிறப்பு சோதனையின் முதல்நாளில் 877 ஆம்னி பஸ்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 124 பஸ்கள் போக்குவரத்து விதிகளை மீறியது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பஸ்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, ரூ.3 லட்சத்து 24 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வாகன சாலை வரி ரூ.4 லட்சத்து 99 ஆயிரத்து 140 வசூல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story