விரைவில் 125 கி.மீ. வேகத்தில் போடிக்கு ரெயில் போக்குவரத்து


விரைவில் 125 கி.மீ. வேகத்தில் போடிக்கு ரெயில் போக்குவரத்து
x

உயர் அதிகாரிகள் பலரும் ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ள நிலையில், விரைவில் போடிக்கு ரயில் போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேனி,

மதுரை-போடி அகல ரெயில்பாதை திட்டப்பணி நடந்து வருகிறது. இதில், தேனி வரை பணிகள் முடிவடைந்ததையொட்டி பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. தற்போது போடி வரை பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, கடந்த 2-ந்தேதி ரெயில் என்ஜின் அதிவேக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.

போடியில் இருந்து தேனி வரையிலான 15 கி.மீ. தூர தண்டவாள பாதையில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் ரெயில் என்ஜின் இயக்கப்பட்டது. அப்போது ரெயில் என்ஜின் 9 நிமிடம் 20 நொடிகளில் 15 கி.மீ. தூரத்தை கடந்தது. இதையடுத்து தேனி-போடி ரெயில் பாதையில் ரெயில் செல்லும் போது அதிர்வுகள் ஏற்படுகிறதா? வேறு ஏதேனும் சிறு குறைபாடுகள் இருக்கிறதா? என்பதை கண்டறிய நவீன ஆய்வு ரெயில் சோதனை ஓட்டம் கடந்த 9-ந்தேதி நடந்தது.

போடியில் இருந்து தேனிக்கு சுமார் 125 கிலோமீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி இறுதி கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டத்தின் அடிப்படையில் இருப்புப் பாதைகளின் பாதுகாப்பு நிலை குறித்து, தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் இறுதிக்கட்ட அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

தென்னக ரயில்வேயின் உயர் அதிகாரிகள் பலரும் ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ள நிலையில், விரைவில் போடிக்கு ரயில் போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story