ரெயில் நிலையம் அருகில் அனாதையாக கிடந்த 1,250 கிலோ ரேஷன் அரிசி
ரெயில் நிலையம் அருகில் அனாதையாக கிடந்த 1,250 கிலோ ரேஷன் அரிசி
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையம் அருகில் ரெயில் மூலம் கேரளாவுக்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக நாகர்கோவில் வட்ட வழங்கல் அதிகாரி ஜெகதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை 6.30 மணி அளவில் அதிகாரி ஜெகதா மற்றும் வருவாய் ஆய்வாளர் கவுதம் பெருமாள் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது ரெயில் நிலையம் அருகில் ஏராளமான பிளாஸ்டிக் சாக்குப் பைகளில் 1,250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அந்த அரிசி மூடைகளின் அருகில் ஒரு மோட்டார் சைக்கிளும் இருந்தது.
அதிகாரிகள் அரிசி மூடைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் குறித்து விசாரித்தும் யாரும் சொந்தம் கொண்டாடவில்லை. இதையடுத்து அதிகாரிகள் அந்த ரேஷன் அரிசி மூடைகளையும், மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவை கோணத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் ஒப்படைக்கப்பட்டது.